மருத்துவ குணம் நிறைந்த மகிழ மரம் வளர்ப்பு
மகிழ மரம் வளர்ப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது: சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன் படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், மகிழம் மரங்கள் வளர்த்து வருகிறேன். மகிழம் மரத்தை பொறுத்த வரையில், பூக்கள், காய்கள், பழங்கள் என, அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், சந்தை படுத்துவது எளிது. குறிப்பாக, மகிழ மரத்தின் பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு, மதிப்பு கூட்டிய எண்ணெயாக மாற்றி விற்கலாம். அதன் காய்களை, பல் பொடியாக செய்து விற்பனை செய்யலாம். மேலும், பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் விதைகளை உலர்த்தி, பவுடராக மாற்றி உட்கொள்ளலாம். தோல், பல், சருமம் உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்னை களுக்கும் தீர்வாக மகிழம் மரத்தின் பொருட்கள் உபயோகப் படுகின்றன. இதை சந்தைப் படுத்தும் திறனுள்ள விவசாயிகள் தேர்வு செய்தால், நல்ல வருவாய் ஈட்டலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு பி. மாதவி, 97910 82317.