இலைச்சுருட்டு புழு தாக்குதலா
நெல்லில் இலைச்சுருட்டு புழு தாக்குதல் தென்பட்டால் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள் பின்பற்ற வேண்டும். இலைச்சுருட்டு புழு தாக்கப்பட்ட நெற்பயிரில் இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும். தாக்குதல் தீவிரமாகும் போது வயல் முழுவதும் வெண்மை நிறத்தில் காய்ந்தது போன்று காணப்படும். தாக்குதல் தென்படும் இடங்களில் தழைச்சத்து, யூரியா, அம்மோனியம் சல்பேட் உரங்களை அதிகளவில் இடுவதை தவிர்க்க வேண்டும். இலைச்சுருட்டு புழு தாக்குதல் தென்பட்டால் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். தளிர்நிலை பருவத்தில் தாக்குதல் ஏற்பட்டால் 10 சதவீத பொருளாதார சேதமும் பூக்கும் பருவம் அல்லது ஒரு நெல்குத்தில் இரண்டு பாதிக்கப்பட்ட இலைகள் தென்பட்டால் 5 சதவீதம் பாதிப்பு ஏற்படும். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் என்ற அளவில் நடவு செய்த 37வது, 44, 51வது நாளில் விடுவிக்க வேண்டும். பேசில்லஸ் துருன்ஜியன்சிஸ் உயிர்க்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 600 கிராம் வீதம் தெளிக்க வேண்டும் அல்லது பிவேரியா பேசியானா உயிர்க்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு ஒரு கிலோ அளவு தெளிக்கலாம் அல்லது 400 மில்லி அசாடிராக்டின் 0.03 சதவீதம் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகமாக தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு 400 கிராம் கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50 எஸ்.பி., யை தெளிக்க வேண்டும் அல்லது 60 மில்லி குளோரான்ட்ரனிலிபுரோல் 18.5 எஸ்.சி., அல்லது 4 கிலோ குளோரான்ட்ரனிலிபுரோல் 0.4 ஜி, அல்லது 20 - 25 கிராம் பிப்ரோனில் 80 டபிள்யூ.ஜி., அல்லது 80 மில்லி இன்டோக்சாகார்ப் 15.8 எஸ்.சி., அல்லது 40 கிராம் தயோமீத்தாசம் 25 டபிள்யூ.ஜி. அல்லது 50 கிராம் புளுபென்டியமைடு 20 டபிள்யூ.ஜி., ஏதாவது ஒன்றை தெளிக்கவேண்டும். -சுரேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை