மலை மண்ணிலும் மக்கடாமியா சாத்தியம்
மக்கடாமியா நட் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பட்டதாரி இளைஞர் எம்.ராஜிவ் காந்தி கூறியதாவது:மலை மண் தோட்டத்தில், மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழ மரங்களை நட்டுள்ளேன். இதுதவிர, வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மர வகைகளை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், மக்கடாமியா நட் செடி வரப்பு பயிராக சாகுபடி செய்துள்ளேன்.இது, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. நம்மூர் மலை மண்ணில் ஒட்டு ரக செடி சாகுபடி செய்துள்ளேன். இது, மூன்று ஆண்டுகளுக்கு மேல் மகசூல் கொடுக்க துவங்கும். இதன் காய்கள், பச்சை நிறத்தில் கொத்து கொத்தாக காய்க்கும் தன்மை உடையது.இதன் காய்களை உலர்த்தி, பருப்பாக மாற்றி விற்பனை செய்யலாம். பாதாம், முந்திரி உள்ளிட்ட உலர் பருப்பு வகைகளை க்காட்டிலும், மக்கடாமியா உலர்ந்த பருப்பிற்கு அதிக விலை கிடைப்பதால், கூடுதல் வருவாய்க்கு வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எம்.ராஜிவ் காந்தி,89402 22567.