உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் மதுரை விவசாயி

நிலமுள்ள விவசாயிகள் மட்டும் தான் விவசாயம் செய்ய வேண்டுமா. இந்த தலைமுறையினர் அனைவருமே விவசாயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப மாதந்தோறும் பள்ளி மாணவர்களுக்கும் விவசாய பயிற்சி அளித்து வருகிறேன் என்கிறார் மதுரை பேரையூர் பெருங்காமநல்லுாரைச் சேர்ந்த முன்னோடி தோட்டக்கலை விவசாயி பன்னீர்செல்வம்.விவசாய அனுபவங்களை அனைவருக்கும் பகிர்ந்து வரும் பன்னீர்செல்வம் அதன் விளைவுகள் குறித்து கூறியதாவது:பெருங்காமநல்லுாரில் 8 ஏக்கரில் விவசாயம் செய்கிறேன். ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் பெற்று 1000 சதுர மீட்டரில் பசுமைக்குடில் அமைத்தேன். அதில் பகுதியளவு தான் வெயில் வரும். மீதி தடுக்கப்பட்டு விடும். இதில் கிடைத்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து மூன்று குடில்கள் அமைத்தேன். அதில் நாற்றுகள் உற்பத்தி மட்டுமே செய்கிறேன். பல்லாங்குழி போன்ற டிரேக்களில் தேங்காய் நார்த்துகள்களை பரப்பி கத்தரி, தக்காளி, மிளகாய், செண்டுப்பூ விதைகளை இட்டு நாற்றுகளை உற்பத்தி செய்கிறோம். பத்து பெண்களுக்கு சீருடை வழங்கியுள்ளேன். தினமும் வேலை தருவதால் இவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. ஒரு ஏக்கரில் கத்தரி, தக்காளி பயிரிட்டுள்ளேன். தலா 1000 சதுர மீட்டர் வீதம் 3 பசுமைக்குடில்கள் அமைத்துள்ளேன். மல்பெரி செடிகளை நாற்றுகளாகவும் உற்பத்தி செய்து தருகிறேன். 30 முதல் 35 நாட்கள் வயதுடைய கத்தரி, 25 முதல் 28 நாட்கள் வயதுடைய தக்காளி நாற்றுகளை தலா 60 காசு வீதம் விற்கிறேன். பிற மாவட்ட விவசாயிகளும் நாற்றுகளை வாங்கிச் செல்கின்றனர். பட்டுப்புழுவில் வருமானம்பட்டுப்புழு வளர்ப்புக்காக 6 ஏக்கரில் மல்பெரி செடிகள் வளர்க்கிறேன். பட்டுப்புழுக்களை உற்பத்தி செய்ய 100 அடி நீளம், 22 அடி அகலமுள்ள செட் அமைத்துள்ளேன். பட்டுப்புழுக்களை வளர்த்து மாதந்தோறும் அறுவடை செய்கிறேன். வெண்பட்டு கூடு என்பதால் விலையும் அதிகம். கடந்த மாதம் கிலோ ரூ.725 வீதம் 225 கிலோ கூடுகளை விற்றதில் ரூ.1.6 லட்சம் கிடைத்தது. பட்டுப்புழுக்களுக்கு மல்பெரி செடிகளின் இலைகள் தான் உணவு. அதற்கேற்ப 6 ஏக்கரில் எந்தெந்த செடிகளின் இலைகளை பறிக்க வேண்டும் என அட்டவணைப்படுத்தி கவாத்து செய்வதால் மாதந்தோறும் தடையின்றி இலைகள் கிடைக்கின்றன. மூன்றடி உயர பாக்கெட் கன்றுகள் ரூ.5க்கும், நிலத்தில் இருந்து பறித்து தரும் நாற்றுகளை ரூ.2க்கும் தருகிறேன். மதுரை டி.கல்லுப்பட்டி, பேரையூர், தாடையம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் பண்ணை சார்ந்த பயிற்சி அளிக்கிறேன். விதை இடுவது, களை எடுப்பது, நாற்று நடுவது, சிறிய இயந்திரங்களை பயன்படுத்தும் பயிற்சி அளிப்பதால் விவசாயம் பற்றி இந்த தலைமுறையினரும் தெரிந்து கொள்கின்றனர்.தேனீப்பெட்டிகள் வளர்த்து அவற்றை கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கிறேன். சொட்டுநீர் பாசனம், அதற்கான கருவிகள், இடுபொருட்கள் அனைத்திற்கும் அரசு மானியம் தருகிறது. எந்த தொழில் செய்தாலும் உழைப்பு முழுமையாக இருந்தால் தான் பலனும் முழுமையாக கிடைக்கும். விவசாயமும் அதுபோல தான் என்றார். இவரிடம் பேச 97863 89272.-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !