உள்ளூர் செய்திகள்

டேபிள்களை அலங்கரிக்கும் மைக்ரோகிரீன்

இடமிருந்தால் தான் விவசாயி யாக மாற வேண்டும் என்ற அவசியமில்லை. மனமிருந்தால் ஒவ்வொருவர் வீட்டிலும் டேபிளிலும் 'மைக்ரோகிரீன்' உற்பத்தி செய்யலாம் என்கிறார் மதுரை பாசிங்காபுரத்தைச் சேர்ந்த விவசாயத்தில் ஆராய்ச்சிப்பட்டம் முடித்த ராஜேஷ் நல்லையா.விவசாய கல்லுாரியில் உதவி பேராசிரியராக, வங்கியாளராக, கார்ப்பரேட் நிறுவன மேலாளராக பணிபுரிந்த ராஜேஷ்க்கு விவசாயத்தின் மீதான ஆர்வம், நல்ல வேலையை கைவிட வைத்து விவசாயத்தை கையில் எடுக்க வைத்தது. விவசாய ஆலோசகர், பயிற்சியாளரானது குறித்து ராஜேஷ் விவரிக்கிறார்.வேலையை விட்டபின் விவசாயத்திற்கான ஆலோசனை வழங்கும் அக்ரி கிளினிக் ஆரம்பித்தேன். விவசாயத்தோடு சார்ந்த பிற தொழில்கள் மூலமும் விவசாயி வருமானம் ஈட்ட வேண்டும் என்பது தான் விவசாயத்தின் அடிப்படை நிலை. விதைகளை தேர்வு செய்வது, ஆர்கானிக் உரம் கொடுப்பது, நீர்ப்பாசனம், அறுவடை வரை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குகிறேன். இதில் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பமும் முக்கியம். ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் ஆடு, மாடுகளை வளர்ப்பது, அவற்றுக்கு சத்தான தீவனம் வழங்குவது என பயிற்சி அளிக்கிறேன். ஆப் சீசனில் கூட வருமானம் தரும் தொழிலாக காளான் பண்ணை, மண்புழு உரப்பண்ணை அமைத்து கொடுக்கிறேன்.மாடித்தோட்டம், செங்குத்து தோட்டத்தில் பெண்கள் மட்டுமல்ல விவசாயிகள், கார்ப்பரேட் நிறுவன பிரதிநிதிகள் ஆர்வம் காட்டுகின்றனர். காய்கறி, கீரைகளைத் தாண்டி வேறென்ன செய்யலாம் என்ற போது 'மைக்ரோகிரீன்' தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டேன். நமது உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து சத்துப்பற்றாக்குறையை நீக்கும் அற்புத மருந்து தான் 'மைக்ரோகிரீன்'.வீட்டில் இருக்கும் விதைகளைக் கொண்டே 'மைக்ரோகிரீன்' உருவாக்கலாம். அவரை, உளுந்து, பாசிப்பயறு விதைகளை விதைத்து அறுவடை செய்வதற்கு நிலமும் வேண்டும், 3 முதல் 5 மாதங்கள் வரை காத்திருக்கவும் வேண்டும். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. தென்னைநாரில் இவற்றை உருவாக்கலாம், மண்ணில்லாமல் 'ஹைட்ரோபோனிக்ஸ்' முறையிலும் சாகுபடி செய்யலாம். அரைக்கீரை, தண்டு கீரை, சிவப்பு தண்டு கீரை, சிவப்பு சிறுகீரை, பாலக் கீரை வகைகளை விதைக்கலாம். இருவித்திலை தாவரமான அவரை, துவரை, உளுந்து, பாசிப்பயறு, சோயா போன்ற புரதச்சத்து தரும் செடிகளையும் 'மைக்ரோகிரீன்' ஆக வீட்டில் வளர்க்கலாம். இவற்றை ட்ரேயில் விதைத்த 10வது நாளில் தண்டு வரை வெட்டியெடுக்கலாம். தண்டிலிருந்து மீண்டும் துளிரும் என்பதால் மீண்டும் 3 முதல் 4 முறை அறுவடை செய்யலாம்.10 நாட்கள் தாவரம் என்பதால் இவற்றை சமைக்காமல் காலைநேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். சாண்ட்விச்சில் சேர்த்து சாப்பிடலாம். இது 'அல்கலைன்' குணம் உள்ளதால் அல்சர் பிரச்னை குறையும். சாப்பிடும் எண்ணம் குறைவதால் உடல்பருமனும் குறையும். ஆடு, கோழி இறைச்சிக்கு சமமான புரோட்டீன் கிடைக்கும். செரிமான சக்தி எளிதாக இருக்கும். கடைகளில் விற்கும் 'சிந்தடிக்' புரோட்டீனுக்கு பதிலாக இதை சாப்பிடலாம்.முளைகட்டிய பயிரின் அடுத்த நிலை தான் 'மைக்ரோகிரீன்' தொழில்நுட்பம் என்பதால் முழு தாவரத்தையும் சாப்பிடலாம். சாதாரண அறை வெப்பநிலையில் வீட்டு டேபிள்களில் வளர்க்கலாம். அல்லது தொழிலாக தொடங்க திட்டமிட்டால் குறைந்தபட்சம் தனியாக ஒரு அறை வேண்டும். விவசாயிகள், தொழில்முனைவோர், பெண்களுக்கு இதுகுறித்து பயிற்சி அளிக்கிறேன். ஆராய்ச்சிப்படிப்பு முடித்துள்ளதால் 'மைக்ரோகிரீன்' இலை, தண்டை 'டீஹைட்ரேட்' மூலம் நீர்ச்சத்தை குறைத்து 'கேப்ஸ்யூல்' வடிவிலும் 'சோலார் டிரையர்' மூலம் பவுடராக்கும் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ளேன். அழகுச்செடி வளர்ப்பதற்கு பதிலாக வீட்டு வரவேற்பறை, டைனிங் டேபிள், பால்கனியிலும் இதை வளர்க்கலாம் என்றார்.இவரிடம் பேச அலைபேசி: 98428 41987-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !