வறண்ட நிலத்திலும் வளமான விளைச்சல் தரும் கம்பு
உலர்ந்த மற்றும் குறைந்த மழைப்பொழிவு பகுதிகளில் வளரக்கூடிய இந்தியாவின் முதன்மையான சிறுதானியப் பயிர் கம்பு. கோதுமைக்கு இணையான புரதச்சத்து இதில் உள்ளது. வறட்சி எதிர்ப்பு தன்மை கம்பு பயிர் 25 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சிறப்பாக வளரும். இது வறட்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. நல்ல வடிகால் வசதி கொண்ட மணல், களிமண்ணில் சிறப்பாக வளரும். தண்ணீரின் பி.எச். மதிப்பு 6 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். நிலம் தயாரித்தல் நிலத்தை 2 முதல் 3 முறை உழவேண்டும். கடைசி உழவில் எக்டேருக்கு 10 முதல் 12 டன் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் சேர்க்க வேண்டும். காரீப் பருவம் (ஜூன்,- ஜூலை), ரபி பருவம் (செப்., அக்.,), கோடை (பிப்., மார்ச்) பருவங்களில் கோ 9, கோ 10, ஐ.எம்.சி.வி.221, தன்சக்தி ஏற்றது. நேரடி விதைப்பு எக்டேருக்கு 4 கிலோ விதைகளை 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதவீதம் சோடியம் குளோரைடு ஏதாவது ஒன்றில் 16 மணிநேரம் ஊறவைத்து 5 மணி நேரம் நிழலில் உலர்த்திய பின் விதைத்தால் முளைப்பு மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும். நாற்றுக்களை 18 நாட்களுக்கு மேல் நாற்றாங்காலில் வைக்கக்கூடாது. வரிசைக்கு வரிசை 45 செ.மீ., செடிக்குச் செடி 15 செ.மீ., இடைவெளி தேவை. விதைகளை 2 முதல் 4 செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும் அல்லது விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி அல்லது அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். உரம், நுண்ணுாட்டச்சத்துரகங்களுக்கான உர பரிந்துரை படி நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் 70:35:35 விகிதத்திலும் கலப்பினங்களுக்கு 80:40:40 விகிதத்திலும் உரமிட வேண்டும். மொத்த பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரத்துடன் 50 சதவீத நைட்ரஜன் விதைப்பின் போது இடவேண்டும். மீதமுள்ள நைட்ரஜன் 30 நாட்களுக்குப் பின் இடவேண்டும். எக்டேருக்கு 12.5 கிலோ நுண்ணுாட்டச்சத்து கலவையை 50 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்வதற்கு முன் அல்லது விதைத்த பின் இடவேண்டும். நுண்ணுாட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால் எக்டேருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட் இடவேண்டும்.கோடையில் 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த 15 ம் நாள் மற்றும் 30ம் நாள் கையால் களை எடுக்க வேண்டும். விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு அதாவது களை முளைப்பதற்கு முன் எக்டேருக்கு 0.25 கிலோ அட்ரசின் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் மேலாண்மைஇளம் செடிகளை தளிர் 'ஈ'க்கள் தாக்கினால் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிட்டாகுளோபிரிட் 70 டபிள்யூ.எஸ். மூலம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். அறுவடை செய்ததும் உழுது தண்டுகளை அகற்ற வேண்டும்.பூஞ்சைக் காளானால் பாதிக்கப்பட்ட தாவரங்கள் வளர்ச்சி குன்றி விடும். மெட்டலாக்சில், மேன்கோசெப் 500 கிராம் பூஞ்சைக் கொல்லி பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். எர்காட் நோய் தாக்கினால் எக்டேருக்கு மான்கோசெப் 1000 கிராம் பூஞ்சைக்கொல்லியை 50 சதவீத பூக்கும் நிலையில் தெளிக்க வேண்டும். துரு நோய்க்கு எக்டேருக்கு 2500 கிராம் நனையும் கந்தகம் அல்லது 1000 கிராம் மான்கோசெப் தெளிக்கவேண்டும். அறுவடை தயார்75 முதல் 85 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். 20 முதல் 25 சதவீத ஈரப்பதம் இருக்கும் போது அறுவடை செய்யவேண்டும். அதன் பின் தானியங்களை 10 முதல் 15 சதவீத ஈரப்பதம் வரை உலர்த்த வேண்டும். சிறந்த முறையில் மேலாண்மை செய்தால் எக்டேருக்கு 2.5 டன் முதல் 3.5 டன் கம்பு உற்பத்தி கிடைக்கும்.வாசுகி, விதை ஆய்வு துணை இயக்குநர்,விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை,மதுரை.அலைபேசி: 80722 45412