உள்ளூர் செய்திகள்

பட்டுப்புழு கழிவுகளை உரமாக்கலாம்

பட்டுப்புழு வளர்ப்பு பண்ணைகளில் உள்ள புழு படுக்கைகளில் மீதியாகும் மல்பெரி இலைகள், இதர கழிவுகள், பட்டுப்பூச்சியின் கழிவுகளை மதிப்பு மிக்க உரமாக மாற்றலாம்.ஒரு ஏக்கர் பண்ணை கழிவுகளை சேகரிக்க 3x1x1 மீட்டர் அளவுகளில் இரண்டு குழிகள் எடுக்க வேண்டும். பட்டுப்புழு கழிவு, மீதி இலைகள், களைகளை தினமும் மெல்லிய படுகையாக சேகரிக்க வேண்டும். அதன் மேல் புது மாட்டு சாணம், சாம்பல் சேர்த்து நீர் தெளிக்க வேண்டும். புழுவளர்ப்பு முடிவில், தோட்டத்தில் மீதமாகும் இலைகள், இளம் மல்பெரி கிளைகளையம் உரக்குழியில் சேர்க்க வேண்டும்.உரத்தை வளப்படுத்துவதற்காக சூப்பர் பாஸ்பேட் சேர்க்கலாம். குழி நிறைந்து தரைமட்டத்திலிருந்து 30 முதல் 40 செ.மீ., உயரம் வந்தபின், மாட்டுச் சாணம், மண்ணை 2.5 செ.மீ., அளவிற்கு ஒரு அடுக்காக உருவாக்க வேண்டும். நேரடி சூரிய ஒளியிலிருந்து குழியை பாதுகாக்க வேண்டும். ஒரு டன் உரத்தை மட்க செய்வதற்கு 'அஸ்பார்ஜில்லஸ் எஸ்பி, டிரைக்கோடெர்மா எஸ்பி, பேலோரோமைசிஸ்' பூஞ்சாண கொல்லி கலவையை ஒரு கிலோ சேர்க்க வேண்டும்.காற்று, காற்றில்லா முறையில் ஒரு எக்டேர் பட்டுப்புழு வளர்ப்பு பண்ணையிலிருந்து ஆண்டு தோறும் 10 முதல் 15 டன் மட்கிய சத்தான உரம் உருவாக்கலாம். இதில் 280 முதல் 300 கிலோ நைட்ரஜன், 90 கிலோ பாஸ்பரஸ், 750 கிலோ பொட்டாசியம் உள்ளது.இந்த உரத்தில் 30 சதவீத ஈரப்பதம், 2 முதல் 2.24 சதவீத தழைச்சத்து, 0.93 முதல் ஒரு சதவீத மணிச்சத்து, 1.5 முதல் 1.8 சதவீத நுண்ணுாட்ட துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, தாமிரம் கலந்த நுண்ணுாட்ட உரமாக இருக்கும். இந்த உரம் பண்ணை எருவுடன் ஒப்பிடும்போது கூடுதல் சத்தானது.

மண்புழு உரம் தயாரித்தல்

ஒரு எக்டேரில் 7.5 x 6 மீட்டர் பரப்பில் சற்று உயரமான கூரை வேய்ந்த கொட்டகையில் மல்பெரி பண்ணை ஏற்படுத்த வேண்டும். கற்களால் வரப்பு ஏற்படுத்தி2.4 x 0.6 x.0.45 மீட்டர் அளவுகளில் 2 வரிசைக்கு 4 என்ற வீதத்தில் 8 சால் அகழியை இணையாக அமைக்க வேண்டும். கொட்டகையில் மண்புழுக்கள் நுழைவதை தவிர்க்க உள் பக்கத்தில் கீழே மற்றும் பக்க சுவர்களை பாலித்தீன் தாள் அல்லது கல் வரிசை கொண்டு தடுக்க வேண்டும்.ஒரு டன் களைகள், பட்டுப்புழு வளர்ப்பு கழிவுடன் சாணக் கரைசல், 100 லிட்டர் தண்ணீர் கலக்கி வைக்க வேண்டும். இந்தக் கலவையை 7 முதல் 10 நாட்கள் கழித்து பார்த்தால் பாதி மட்கியிருக்கும். பாதியளவு மட்கிய கலவையின் வெப்பநிலை 50 முதல் 60 செல்சியஸ் உயரும் என்பதால் இக்கலவையை கீழிருந்து மேலாக இரண்டு முறை கலக்கும் போது வெப்பநிலையை குறையும்.ஒவ்வொரு குழியிலும் 200 முதல் 300 கிலோ அளவு 30 முதல் 40 சதவீதம் ஈரப்பதம் கொண்ட பாதி மட்கிய நிலையிலிருக்கும் பட்டுப்புழு வளர்ப்பு கழிவு நிரம்புமாறு இருக்க வேண்டும். மண்புழுவானது 30 முதல் 40 சதவீத ஈரப்பதம், சாதாரண தட்பவெப்ப நிலையில் உணவை உட்கொள்கிறது. கழிவுப் பொருட்கள் மட்கும் நேரங்களில் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் மண்புழு இறந்துவிடும் என்பதால் அவை உயிர் வாழ்வதற்கு ஏற்ப ஈரப்பதம், வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டும்.மண்புழுக்கள் வெளிவந்த 2 முதல் 3 நாட்களுக்கு பிறகு ஈரப்பதத்தை பாதுகாப்பதற்காக தொடர்ந்து தண்ணீரை தெளித்து தென்னை ஓலை அல்லது பச்சை இலைகளால் மூட வேண்டும். அனைத்தும் மட்க ஒரு வாரம் வரை கீழிருந்து மேலாக கலக்க வேண்டும். 6 --- 7 வாரங்களில் மண்புழுக்கள் கரும்பழுப்பு நிற குருணை வடிவ கழிவுகளை வெளியேற்றும். இதனை சல்லடையால் சலித்தெடுத்து கொட்டகையின் உள்ளே உலர்த்தி எடுத்தால் மண்புழு உரம் தயாராகி விடும். சுற்றுச்சூழல் தொடர்புடைய தொழில்நுட்பம் மூலம் பட்டுப்புழு கழிவுகளை உரமாக, மண்புழு உரமாக மாற்றலாம்.தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகோவை - 641 003.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !