உள்ளூர் செய்திகள்

 தானிய சேமிப்பில் பூச்சி மேலாண்மை

உலகம் முழுவதும் உட்கொள்ளப்படும் முக்கிய உணவு தானியங்கள், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பின் போது பூச்சித் தொல்லையால் பெரும் இழப்புகளை ஏற்படுத்துகின்றன. வளர்ந்த நாடுகளில், சேமிக்கப்பட்ட பொருட்களின் மீது பூச்சிகளால் ஏற்படும் இழப்பு 9 முதல் 20 சதவீத அளவு வரை உள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம், 'பூஜ்ஜிய பசிக்கு பூஜ்ஜிய இழப்பு'என்ற முயற்சியை முன்வைத்துள்ளது. அறுவடைக்கும் உணவு தானியங்களின் நேரடி நுகர்வுக்கும் இடையிலான படிகளில் ஒன்று சேமிப்பு. இந்தியாவில் ஆண்டுதோறும் அறுவடைக்குப் பிந்தைய பூச்சிகளால் ஏற்படும் சேதமானது ரூ.7000 கோடி மதிப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகு முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அரிசி, தானிய, பயறு வகை வண்டுகள், மாவு வண்டு, நெல், உருளைக்கிழங்கு அந்துப்பூச்சிகள் சேமிப்பில் உள்ள தானியங்களை சேதப்படுத்துகின்றன. சேமிப்புக்கிடங்கு பூச்சிகள் அரிசி அந்துப்பூச்சி, மாவு, தானிய வண்டுகள், பெரிய, சிறிய தானிய துளைப்பான்கள் துளையிட்டு முட்டையிட்டு, புழுக்களாக வளர்ந்து சேதப்படுத்துகின்றன. கிடங்குகளைச் சுத்தம் செய்து புற ஊதா ஒளிப் பொறிகளைப் பயன்படுத்த வேண்டும். பூச்சிப் பொறிகளைப் பயன்படுத்த புதிய தானியங்கள் அல்லது சேமிப்புப் பொருட்கள் வரும்போதெல்லாம், பழைய அல்லது பாதிக்கப்பட்ட தானியங்களை அகற்றுவது நல்லது. எந்தவொரு பொருளையும் நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதற்கு முன்பாக கிடங்கு, கிட்டங்கி அல்லது சேமிப்பு கட்டமைப்புகளில் டெல்டாமெத்ரின் 2.5 டபிள்யூ.பி. (40 கிராம்/லி) மற்றும் மாலத்தியான் 50 இ.சி., (ஒரு சதவீதம்) பூச்சிக்கொல்லிகளை சுவர்கள், தரை, சந்து, மேற்பரப்பு தானிய பைகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் பயன்படுத்தலாம். வெயிலில் உலர்த்துதல் தானியங்களை அறுவடைக்குப் பின் உலர்த்தி ஈரப்பதம் 8 முதல் 10 சதவீதத்திற்குள் இருக்குமாறு சேமிக்க வேண்டும். சூரிய ஒளியில் உலர்த்தினால் பூஞ்சை, நிறமாற்றம், பூச்சி சேதத்தால் ஏற்படும் சேமிப்பு இழப்பு குறைகிறது. சேமிப்பு காலத்தின் நீளத்தைப் பொறுத்து ஈரப்பதம் மாறுபடலாம். தானியங்களை சுத்தம் செய்தால் சேமிப்பு கட்டமைப்பிற்குள் சீரான காற்றோட்டத்தை உறுதி செய்து பூஞ்சை வளர்ச்சியின் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மாலத்தியான் 50 சதவீத இ.சி., 1:100 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 100 சதுர மீட்டர் பரப்பளவில் 3 லிட்டர் அளவு தெளிக்கலாம். இதேபோல் 40 கிராம் டெல்டாமெத்ரின் 2.5 சதவீத டபிள்யூ.பி. ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, 90 நாட்களுக்குப் பிறகு 100 சதுர மீட்டர் பரப்பளவில் 3 லிட்டர் அளவு தெளிக்க வேண்டும். தானிய அடுக்கு அல்லது கிடங்குகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பாஸ்பைன் புகையூட்டிகளால் புகையூட்ட வேண்டும். உலர்ந்த வேம்பு, மார்கோசா இலைகளை உணவு தானியங்களுடன் கலந்து சாக்குப்பை அல்லது தொட்டிகளில் சேமிக்கலாம். 200 கிராம் உப்பை ஒரு கிலோ பருப்பு வகைகளில் கலந்து 6 முதல் 8 மாதங்கள் வரை சேமிக்கலாம். சிவப்பு மண்ணையும் தண்ணீரையும் கலந்து பேஸ்ட் போல உருவாக்கி விதைகளை இந்த கொள்கலனில் மாற்றி நன்கு கலக்கலாம், இதனால் மண் விதைகளுடன் முழுமையாக ஒட்டிக்கொள்ளும். விதைகளை பின்னர் நிழலில் உலர்த்தி சாக்குப்பையில் மாற்றலாம். சேமிப்பு அறையின் வாசற்படி சுவரை தொடாமல் இருக்கும்படி சுவர் அமைத்தால் எலிகள் கிடங்கின் உள்ளே நுழைவதைத் தடுக்கலாம். ஜன்னல்களுக்கு கம்பிவலை பொருத்தினால் எலி, பறவைகள் உள்ளே நுழையாது. பழைய சாக்குப்பைகளை மாலத்தியான் 50 சதவீதம் இ.சி அல்லது டைக்குளோர்வாஸ் 76 சதவீதம் எஸ்.சி. 0.1 சதவீத கரைசலில் நனைத்து உலர்த்திய பின் சேமிக்கலாம். ஒரு அடுக்கிற்கு ஆறு முதல் எட்டு மூட்டைகள் வரை அடுக்கலாம். மூடைகளை மரப்பலகை அல்லது இரும்பு தட்டுக்களின் மேல் அடுக்க வேண்டும். பூச்சிகளின் நடமாட்டம் தெரிந்தால் மூட்டைகளின் இடைவெளிப்பகுதி, சேமிப்பு அறையின் கதவு, சுவர்களில் மாலத்தியான் 50 சதவீதம் இ.சி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி கலந்தோ அல்லது டைகுளோர்வாஸ் 76 சதவீதம் எஸ்.சி. மருந்தினை 7 மில்லி கலந்தோ தெளிக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கண்டுபிடித்துள்ள ஊதா கதிர் விளக்குப் பொறிகளை பயன்படுத்தலாம். இந்தியாவில் 59 முதல் 70 சதவீத உணவு தானியங்கள் நெல் அல்லது கோதுமை வைக்கோல், மூங்கில், மரம், செங்கல், சேறு, மாட்டு சாணத்தால் தயாரிக்கப்பட்ட சேமிப்பு அமைப்புகளில் சேமிக்கப்படுகின்றன. -கா.அரிபுத்திரன் வேளாண்மை அலுவலர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர் அலைபேசி: 82480 80922


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !