ADDED : டிச 24, 2025 | ADDED : டிச 24, 2025
சிவகங்கை மாவட்டம் தமறாக்கியைச் சேர்ந்த இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த விவசாயி சந்திரகுமார், ஆலைக்கரும்பு சாகுபடியில் முதன்முறையாக ஏக்கருக்கு 126 டன் கரும்பு மகசூல் பெற்று மாநில அரசின் முதல் பரிசு பெற்றார். வெளிநாட்டு கனவுடன் சவூதி அரேபியாவில் வேலை செய்தபோது பல இன்னல்களை சந்தித்தேன். ஓராண்டு ஓடியது. 'நிலமிருக்கு... விவசாயம் செய்... வேலையை விட்டுட்டு வா. உன்னை வளர்க்க உதவியது விவசாயம் தான். உன் குடும்பத்தையும் விவசாயம் காப்பாற்றும்' என அம்மா தவமணி ஆறுதல் சொன்னார். மனநிம்மதியுடன் சொந்த ஊருக்கு வந்தேன், விவசாயத்தில் சாதித்தேன் என தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் சந்திரகுமார். 12 ஏக்கர் நிலத்தில் அண்ணன் மதிவாணன் கவனித்துக் கொண்டது போக மீதி 5 ஏக்கரில் முதல் முறையாக ஆலைக்கரும்பு பயிரிட்டேன். ஏற்கனவே இங்கு கரும்பு பயிரிடுகிறோம் என்றாலும் அண்ணன் தான் விவசாய ஆலோசனை வழங்கினார். நிலத்தை இரண்டு முறை அஞ்சு கலப்பையாலும் ஒருமுறை ரோட்டோவேட்டரால் உழுது சாகுபடிக்கு தயார் செய்தேன். நாலரை அடி பார் அமைத்து நான்கு டன் கரும்பு கரணைகளை விதைக்க வேண்டும். டி.ஏ.பி., உரம் கொடுத்து கரணைகளை மண்ணில் மூடி வைத்த ஏழாவது நாள் முளைத்து வரும். முளைப்புத் திறன் குறைவாக இருந்தால் முளைக்காத இடத்தில் மறுபடியும் கரணைகளை விதைக்க வேண்டும். 20 வது நாளில் 20க்கு 20 காம்ப்ளக்ஸ் உரம் ஏக்கருக்கு ஒருமூடை தெளித்தேன். சொட்டு நீர்ப் பாசனம் தான். 60 வது நாளில் ஒரு மூடை காம்ப்ளக்ஸ், ஒரு மூடை, டி.ஏ.பி., 40 கிலோ வேப்பம்புண்ணாக்கு மூன்றையும் கலந்து செடிக்கு வைத்து மண் அணைக்க வேண்டும். களை நிர்வாகம் அவசியம் களை இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். 3 மாதம் கழித்து தரையிலிருந்து வளரும் தோகையை உரித்து விட்டால் பயிருக்கு காற்றோட்டம் கிடைக்கும். சொட்டுநீர்ப்பாசனத்தில் 15 கிலோ பொட்டாஷ், 25 கிலோ யூரியா வீதம் 15 நாளைக்கு ஒருமுறை உரமிட்டேன். அண்ணன் விவசாயம் செய்த போது ஏக்கருக்கு 73 டன் கரும்பு கிடைத்தது. அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட எனக்கு முதல் முயற்சியிலேயே 126 டன் கரும்பு கிடைத்தது. இயந்திர மயம் நிலத்தில் நான்கரை அடி பாரில் மண் அணைப்பதற்கு டிராக்டர் பயன்படுத்தினேன். இன்னொரு டிராக்டர் கொண்டு களை எடுத்து மண் அணைத்தேன். ஒரு ஏக்கரில் பார் அமைக்க இயந்திரம் மூலம் 2 மணி நேரமானது. 20 ஆட்கள் சேர்ந்து ஒருநாள் முழுக்க வேலை பார்த்தால் தான் ஒரு ஏக்கருக்கான பார் அமைக்க முடியும். இதற்கு கூலியாட்கள் செலவு அதிகம். டிராக்டருக்கு ரூ.5000 தான் செலவானது; சொந்த டிராக்டர் என்பதால் டீசல் செலவு மட்டும் தான். சிறிய வகை டிராக்டர் மூலம் களை எடுக்கலாம்; மண் அணைக்கலாம். ஒரு ஏக்கருக்கு ரூ.250 சம்பளத்தில் 30 பேர் சேர்ந்து இரண்டு நாட்கள் களை எடுத்தால் தான் சுத்தமாகும். சிறிய இயந்திரத்தில் ஒரு நாளில் களை எடுத்துவிடலாம். இதிலும் ரூ.5000 மிச்சமானது. இயந்திரங்களைப் பயன்படுத்தியதால் கரும்பில் உற்பத்திச் செலவை குறைக்க முடிந்தது. முதல்பரிசு கிடைத்தது வேளாண் துறையின் கீழ் கரும்பு விவசாய மகசூல் போட்டிக்கு சிவகங்கை வேளாண் துறை அலுவலகத்தில் பதிவு செய்தேன். கடந்தாண்டு பிப்ரவரியில் கரணை பதிவு செய்தேன். இது ஓராண்டு பயிர். 2025 பிப்ரவரியில் கரும்புகளை வெட்டும் போது வேளாண் துறை அதிகாரிகள் வந்தனர். 50 சென்ட் அளவு இடத்தை தேர்வு செய்து கூலியாட்கள் மூலம் கரும்புகளை வெட்டி எடையை கணக்கிட்டனர். 50 சென்ட் பரப்பில் மட்டும் 63 டன் கரும்பு கள் கிடைத்தன. இதுவரை இந்த அளவீட்டை யாருமே எட்டவில்லை. அதற்காக அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் முதல்பரிசுக்கான விருதுபெற்றேன். விலை கிடைக்கிறது கரும்பு தனியார் ஆலையில் உடனடியாக விலை கிடைக்கிறது. ஒரு டன்னுக்கு ரூ.3500 டன் கிடைத்தது. ஒரு டன்னுக்கான கரணை, உரம், இடுபொருள், வெட்டுக்கூலி எல்லாம் சேர்த்து உற்பத்திச்செலவு ரூ.1500 ஆனது. ஒருடன்னுக்கு ரூ.2000 லாபம் கிடைத்தது என்றார். இவரிடம் பேச: 70945 78257. -எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை