வாடல் நோய்க்கு விருக் ஷ ஆயுர்வேத சிகிச்சை
தென்னையில் வாடல் நோய் என்பது விவசாயிகளை நிலைகுலைய வைத்துவிடும். இதற்கு சுரபாலர் ரிஷியின் விருக் ஷ ஆயுர்வேதம் (பண்டைய தோட்டக்கலை நுட்பங்கள்) புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிகிச்சை முறையை கடைப்பிடித்து வெற்றி பெற்றேன் என்கிறார் கோவை செட்டிபாளையத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கிருஷ்ணகுமார்.மரங்கள் தொடர்பான ஆயுர்வேதத்தில் தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுர்வேத கரைசலை எளிய முறையில் தோட்டத்தில் தயாரித்து பயன்படுத்திய போது வாடல்நோய் கட்டுப்பட்டது, காய்ப்புத்திறனும் மண்வளமும் அதிகரித்தது என்று சொல்லும் கிருஷ்ணகுமார், சாதித்த கதையை விவரித்தார்.சுரபாலர் ரிஷி 1500 ஆண்டுகளுக்கு முன் தோட்டக்கலை தொடர்பாக சமஸ்கிருதத்தில் எழுதிய விருக் ஷ ஆயுர்வேதம் எனும் புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. காந்தி கிராம பல்கலை தமிழில் மொழி பெயர்த்தது. கோபியில் 15 ஏக்கரில் 26 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்கிறேன். இயற்கை விவசாய முன்னோடி நம்மாழ்வார், நெல் ஜெயராமனுடன் பயணித்த அனுபவம் உள்ளது. சுபாஷ் பாலேக்கர் புத்தகத்தின் 2ம், 3ம் பகுதிகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். கொடிவேரி பாசன வாய்க்கால் மூலம் நேரடி பாசனம் செய்வதால் 12 ஏக்கரில் ஆனைக்கொம்பன், கோபிகார், சடைச்சம்பா, கிச்சலி சம்பா, உதிரி ரக நெல்லை பயிரிடுகிறேன். 3 ஏக்கரில் தென்னை, மஞ்சள், கரும்பு பயிரிடுகிறேன்.என் தோட்டத்தில் நுாறு தென்னை மரங்கள் உள்ளன. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை காய் பறித்தால் 100 மரங்களில் இருந்து 800 முதல் 900 தேங்காய் கிடைத்தது. தென்னையில் வாடல் நோய் தாக்கினால் சேதம் அதிகமாகும். தென்னை மரத்தின் வேர்ப்பகுதி அழுகி இலைகள் மஞ்சளாகி காய்ந்து உதிர்ந்துவிடும். மரத்தின் அடிப்பகுதியில் சிவப்பு நிற கோந்து போன்ற திரவம் ஒழுகும். மண்ணில் உள்ள பூஞ்சாணங்களால் இந்நோய் பரவுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட மரங்களைச் சுற்றியுள்ள மண்ணில் இருந்து இந்த பூஞ்சாணங்கள் பரவுகின்றன. ஓராண்டுக்கு முன்பே இந்த விருக் ஷ ஆயுர்வேத பார்முலாவை கடைப்பிடித்து பயன்படுத்தினேன்.தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பறித்தால் 2100 முதல் 2400 தேங்காய்கள் கிடைக்கிறது. அதாவது தென்னையின் உற்பத்தித் திறன் அதிகரித்ததை பார்க்க முடிந்தது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை விட நாட்டு மாட்டு சாணம், கோமியத்தில் நுண்ணுயிரிகள் அதிகமாக உள்ளன. இவற்றுடன் மீன்அமினோ கரைசல், உளுந்து, எள் புண்ணாக்கு, வெண் கடுகு, தவிடு, பஞ்சகவ்யா கலந்து முறைப்படி தயாரித்தால் விருக் ஷ ஆயுர்வேத கரைசல் கிடைத்து விடும். ஒருமுறை தென்னை மரத்திற்கு பயன்படுத்தினால் 3 மாதத்தில் பலன் தரும். இல்லாவிட்டால் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றார்.இவரிடம் பேச: 98427 75059.-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை