உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு இட்லி; ஒரு வடை தலா 1 ரூபாய் தான்!

ஒரு இட்லி; ஒரு வடை தலா 1 ரூபாய் தான்!

தொடர்ந்து, மூன்று தலைமுறைகளாக மலிவு விலையில் இட்லி வியாபாரம் செய்து வரும், அரியலுார் மாவட்டம், இளைய பெருமாநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், 65, - ராதா, 55, தம்பதி: * ராதா: என் கணவரின் தாத்தா காலத்தில் இருந்தே மலிவு விலை இட்லி கடை நடத்தி வருகிறோம். அவர் காலத்துக்கு பின் மாமனார், மாமியார் செய்து வந்தனர். என் 13 வயதில் திருமணமாகி, இங்கு வந்தது முதல் மாமியாருடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். மாமனார் - மாமியார் காலத்துக்கு பின் நானும், கணவரும் சேர்ந்து நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில் ஒரு இட்லி, 50 பைசாவிற்கு தான் கொடுத்து வந்தோம். '50 பைசா செல்லாது' என அரசு கூறிய பின், வடை, இட்லி தலா ஒரு ரூபாய்க்கும், டீ, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் ஐந்து ரூபாய்க்கும் கொடுத்து வருகிறோம். தரத்திலும், சுவையிலும் எந்த குறையும் இருக்காது. ஒரு நாளைக்கு 500 இட்லிகள், வடைகள் செய்கிறோம். அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தால் தான், 8:00 மணிக்குள் எல்லாம் செய்து, கடைக்கு எடுத்து வர முடியும். 'வயதான காலத்தில் உடம்பை கெடுத்து கொள்ளாதீர்கள்' என, இரு மகன்களும் சொல்கின்றனர். ஆனால், மாமனார் - மாமியார், 'எங்கள் காலத்திற்கு பின்னும், லாப நோக்கமின்றி இந்த கடை தொடர வேண்டும்' என்று கூறியதால், இதை ஒரு சேவையாக நினைத்து செய்து வருகிறோம். எங்களை நம்பி இந்த கடைக்கு வருவோர் வயிறு நிறைவாக சாப்பிட்டாலே போதும்... எங்களுக்கு மனம் நிறைந்து விடும். * ஸ்ரீதர்: விறகு அடுப்பில் தான் சமைக்கிறோம். சுற்றி இருக்கும் காட்டில் இருந்து விறகு சேகரித்து வருகிறோம். நானும், மனைவியும் சேர்ந்து தான் எல்லா வேலைகளையும் செய்கிறோம். வருமானம் போதவில்லை எனில் கூலி வேலைக்கு செல்வேன். அதில் கிடைக்கும் வருமானத்தில், கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவோம். இந்த கடையால் பெரிதாக லாபம் சம்பாதிக்கவில்லை. ஆனால், எங்கள் இட்லி கடையை நம்பி, கூலி வேலைக்கு செல்வோர், ஏழை எளிய மக்கள், விவசாய வேலைக்கு செல்வோர், பள்ளி - கல்லுாரி மாணவ - மாணவியர் என பலரும் உள்ளனர். 'உங்கள் கடையில் 10 ரூபாய்க்கு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடுகிறது' என, பலரும் கண் கலங்கி கூறுவர். அதோடு, ஒரு நாள் கடைக்கு லீவு விட்டாலும், 'ஏம்மா எங்களை பட்டினி போட்டுட்டீங்க... கடைக்கு லீவு விடாதீங்கம்மா' என்று உரிமையுடன் வாடிக்கையாளர்கள் கூறுவர். கர்ப்பிணியர், வயதானோர், குழந்தைகளிடம் நாங்கள் பணம் வாங்க மாட்டோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !