சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்திற்கு தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: சிதம்பரம் வரவேற்பு
சிவகங்கை: மத்திய அரசு கல்விக்காக ஒதுக்க வேண்டிய இரண்டாயிரத்து 152 கோடி ரூபாயை, தமிழக அரசே பட்ஜெட்டில் ஒதுக்கியதாக அறிவித்ததை வரவேற்பதாக, சிவகங்கையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:மத்திய அரசு, தமிழகத்திற்கு சமக்ர சிக் ஷா அபியான் திட்ட நிதி ரூ. 2,152 கோடியை விடுவிக்காமல் உள்ளது. எனினும், அந்த நிதியை தனது சொந்த நிதியில் இருந்தே விடுவிப்பதாக, தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இப்போதாவது மத்திய அரசுக்கு வெட்கம் வந்து, அந்நிதியை தமிழகத்திற்கு விடுவிப்பார்கள் என நம்புகிறேன்.ரூபாய் அடையாள குறியீடு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அதற்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. தனியார் ஆவணங்களில் ஆங்கிலத்தில் தொகையை எழுதும்போது, ஆர்.எஸ்., என்று தான் எழுதுகிறோம். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. தொகை மதிப்பீட்டை வெளிப்படுத்தும்போது, குறியீடு முக்கியம் இல்லை; அதற்கு பின் வரும் தொகைக்கான எண்களுக்கு தான் மதிப்பு. அதனால், குறியீட்டைக் காட்டிலும் தொகைக்கான எண்கள் தான் மதிப்புடையவை.இவ்வாறு அவர் கூறினார்.