மாணவர் பள்ளி சேர்க்கை வயது வரம்பு தளர்வு: ஒரு வாரத்தில் அறிவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
பெங்களூரு: ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை வயதை தளர்த்த கோரி, மாணவர்கள் விண்ணப்பித்த மனுவுக்கு, ஒரு வாரத்திற்குள் உரிய முடிவெடுக்கும்படி அரசுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணா கணேஷ் உட்பட ஆறு மாணவர்கள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'நடப்பு கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகள் ஒன்றாம் வகுப்பில் சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், மழலையர் பள்ளியில் தங்கள் குழந்தைகளை பெற்றோர் சேர்த்திருந்தனர். இப்பள்ளி கல்வி முடித்து, ஒன்றாம் வகுப்பில் சேரும்போது, அரசின் வயது வரம்பு, குழந்தைகளை ஓராண்டு மீண்டும் படித்ததையே படிக்க வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.கடந்த கல்வியாண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறையை பின்பற்றி, 2026 - 27 கல்வியாண்டின் முதல் வகுப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை, 5 வயது 5 மாதங்கள் உள்ள குழந்தைகளை சேர்க்க அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.இம்மனு, நீதிபதி கிருஷ்ணகுமாரின் விடுமுறைகால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:பள்ளி கல்வி துறை, நடப்பாண்டு மார்ச் 28ல் வயது வரம்பை நிர்ணயித்து, ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுதாரருக்கு இன்னும் ஆறு வயது நிறைவடையவில்லை.இருப்பினும், 2025 - 26ம் ஆண்டுக்கான முன்பருவ கல்வியை முடித்து உள்ளார். இந்த அரசாணையால் சுமார் 5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.அந்த மாணவர்கள் மீண்டும் யு.கே.ஜி., படிக்க வேண்டியிருக்கும். எனவே, அடுத்த கல்வியாண்டு வயது வரம்பு தளர்த்தப்பட்டு, பள்ளி சேர்க்கையை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு வாதிட்டார்.அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், “நியாயமான கால அவகாசம் அளித்தால், வயது வரம்பு தளர்வு குறித்த மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, தேவையான உத்தரவு பிறப்பிக்கப்படும்,” என்றார்.இதையடுத்து நீதிபதி கிருஷ்ணகுமார், “வயது வரம்பு தொடர்பாக மாணவர்களும், பெற்றோரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவ்விஷயத்தில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, ஒரு வாரத்திற்குள் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என்றார்.