உள்ளூர் செய்திகள்

தொழில் துறையில் இந்தியா தான் சிறந்த கூட்டாளி; ஜெர்மன் சாக்ஸனி மாகாண அமைச்சர் புகழாரம்

கோவை: ''இன்றைய சூழலில், சீனா, அமெரிக்கா நம்பத்தகுந்த கூட்டாளியாக இல்லை. இந்தியா தான் சிறந்த கூட்டாளியாக உள்ளது,'' என, ஜெர்மன் சாக்ஸனி மாகாண அமைச்சர் டிர்க் பென்டர் கூறினார்.ஜெர்மன் - இந்தியா ரவுண்ட் டேபிள் மீட் -சார்பில், ஜெர்மனி - சாக்ஸனி மாகாணத்தின் வணிகம் மற்றும் திறன்மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்த மாநாடு கோவையில் நேற்று நடந்தது. ஜெர்மனி, சாக்ஸனி மாகாண பொருளாதார விவகாரங்கள், ஆற்றல் மற்றும் காலநிலை, அமைச்சர் டிர்க் பென்டர் கூறியதாவது:இந்தியாவில் கல்வி மற்றும் வேலைத் திறன் சிறப்பாக உள்ளது.மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறையில், குறிப்பாக செமி கண்டக்டர் துறையில், புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். ஐரோப்பாவில், சாக்ஸனி மாகாணம் செமி கண்டக்டர் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. உலகில் செமிகண்டக்டர் உற்பத்தியில் ஐந்தாவது இடத்தில் உள்ளோம். தமிழகத்தில் செமிகண்டக்டர்கள் உற்பத்தியை செயல்படுத்த உள்ளோம்.தமிழகத்தில் எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கு, 90 சதவீத இயந்திரங்களை வழங்கியுள்ளோம். எங்களது செயற்கைக்கோள் ஏவும் திட்டத்துக்கு இந்தியாவின் ஒத்துழைப்பைஎதிர்பார்த்துள்ளோம். சென்னை ஐ.ஐ.டி., மாணவர்களின் முப்பரிமாண ராக்கெட் இன்ஜின் டிசைன் அற்புதமாக இருந்தது. இதற்கான இயந்திரங்கள் ஜெர்மனில் தயாரிக்கப்பட்டவை. ஆனால், அவற்றின் டிசைன் இந்தியாவில் தயாரானவை. இந்தியா - ஜெர்மன் இடையேயான உறவுக்கு இதுவே சாட்சி.இன்றைய சூழலில் சீனா மற்றும் அமெரிக்கா நம்பத்தகுந்தவையாக இல்லை. இந்தியா மட்டுமே நம்பக்தகுந்த கூட்டாளியாக உள்ளது. ஜெர்மனியில் திறன்கள் இருந்தாலும், அங்கு இளம் தலைமுறையினர் இல்லை. இங்கு அதிகளவில் இளைய மனிதவளம்உள்ளது. அவற்றை பயன்படுத்த உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து நடந்த மாநாட்டில் கோவை ஜெர்மன் இன்டியன் ரவுண்ட் டேபிள் அமைப்பின் நிறுவனர் ராமசாமி வரவேற்றார். சென்னை ஜெர்மன் கான்சுல் ஜெனரல் மைக்கேல் ஹாஸ்பர், சாக்ஸனி டிரேட் அண்டு இன்வெஸ்ட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் ஹார்ன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்