சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் கோர்ட் உத்தரவு
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு இரண்டு விடைகளில் ஏதாவது ஒன்றை அளித்திருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்வில் வேலூர் மாவட்டம் வீராரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரும் பங்கேற்றார்; 81 மதிப்பெண் பெற்றார். கேள்விகளுக்கான விடைத்தாள் வெளியிடப்பட்டது. அதில் கடலை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு என்ற கேள்விக்கு ஆழி என பதில் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு, ஈஸ்வரி தரப்பில், ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. சமுத்திரம் தான் சரியான பதில் என தெரிவித்திருந்தார். ஏற்கனவே வெளியிட்ட விடைத்தாள் அடிப்படையில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட கேள்விக்கு சரியான விடை அளித்தும், மதிப்பெண் அளிக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஸ்வரி மனு தாக்கல் செய்தார். ஆதாரம் மனுவை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். நிபுணர்களின் கருத்தை பெற முதுகலை பட்டம் பெற்ற மூன்று தமிழ் ஆசிரியர்களை நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர்களிடம் கருத்து பெறப்பட்டது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன், "கடலை மட்டும் குறிக்காத சொல் என்பதற்கு, சமுத்திரம் என்பதும் சரியான பதில் தான். சமுத்திரம் என்பதற்கு கடல், ஓர் எண், மிகுதி என்ற அர்த்தங்கள் உள்ளன" என்றார். இதற்கு ஆதாரமாக சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அகராதி- தமிழ் அகரமுதலி, சாரதா பதிப்பகம் வெளியிட்ட தமிழ் அகராதியை வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன் தாக்கல் செய்தார். அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் எம்.ராஜேஸ்வரன், "ஆழி என்பதுதான், சரியான விடை. ஆழி என்பதற்கு கடல், மோதிரம், சக்கரம் என பொருள் உள்ளது. நிபுணர்களும் இது தான் சரி என கூறியுள்ளனர்" என்றார். அனைவருக்கும்... மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றத்துக்கு வந்த நிபுணர்கள் ஆழி தான் சரியான விடை; சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை அல்ல; எனவே சமுத்திரம் சரியான விடை அல்ல என கூறியுள்ளனர். சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை அல்ல என கூறுவதை நான் ஏற்கவில்லை. அது, தமிழ் வார்த்தை அல்ல என்றால், தமிழ் அகராதிகளில் சமுத்திரம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்காது. ஆனால் சமுத்திரம் என்பதற்கு மூன்று விதமான அர்த்தங்கள் இருப்பது, தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள கீ விடைத்தாள் முழுமையாக சரியில்லாததால், மனுதாரருக்கு அளிக்கும் பயன் மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே கடலினை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு என்ற கேள்விக்கு, ஆழி என்றோ சமுத்திரம் என்றோ விடை அளித்திருந்தால், அவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். அனைத்து விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்து திருத்தப்பட்ட முடிவை வெளியிட வேண்டும். ஒரு வாரத்துக்குள் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.