பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மருத்துவமனை விசிட் அவசியம்- சொல்கிறார் டாக்டர்
கோவை: போதை பழக்கங்கள் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா, தொழில்துறை விசிட் போன்று, மருத்துவமனை விசிட் அழைத்து செல்லவேண்டியது அவசியம் என மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் சரண்யா தெரிவித்தார்.மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புகை, மதுப்பழக்கம், பிற போதை பழக்கங்களில் சிக்கிய மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரத்யேகமாக கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் டாக்டர் சரண்யா கூறியதாவது:புகையிலை உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் வாயிலாக, அவர்களது இரண்டு மூன்று தலைமுறைகளை தாண்டியும் மரபணு வாயிலாக அதன் தாக்கம், பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு, அவர்கள் அருகில் நின்று கடலைமிட்டாய் தின்பவர்களுக்கும் வரலாம். பொது வெளியில் புகை பிடிப்பதும், புகையிலை பொருட்களை விற்பதும், சட்டப்படி தவறு.முன்பு, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் இருந்த சூழல் மாறி, ஆறாம் வகுப்பு மாணவர்களே இப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் பல விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளன.ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. பதின்ம வயது என்பதால், கவுன்சிலிங் கொடுத்தாலும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட சிரமப்படுகின்றனர். இதுபோன்ற பழக்கம் காரணமாக பள்ளிகளில் இடைநிற்பதையும் காண்கிறோம். அவர்களை தேடிப்பிடித்து பள்ளியில் சேர்த்தாலும் ஆர்வம் காண்பிப்பது இல்லை.இதுசார்ந்த புதிய திட்டங்கள் ஆலோசனை நிலையில் உள்ளன. வரும் கல்வியாண்டில் அமல்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் சுற்றுலா, இண்டஸ்ட்ரி விசிட் என்று மாணவர்களை அழைத்து செல்வதை போல், மருத்துவமனைகளுக்கு கட்டாயம் அழைத்து செல்லவேண்டும்.இதுபோன்ற தவறான பழக்கத்தால், நோய் பாதிப்புடன் சிரமப்படுபவர்களை பார்த்தால், அபாயங்களை உணர்வார்கள். விழிப்புணர்வு வழங்கும் சமயத்தில் பள்ளி, நிர்வாகத்திடம் இதுசார்ந்த அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு, அவர்கள் அருகில் நின்று கடலைமிட்டாய் தின்பவர்களுக்கும் வரலாம். பொது வெளியில் புகை பிடிப்பதும், புகையிலை பொருட்களை விற்பதும், சட்டப்படி தவறு.