உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் தினமலர்: கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் புகழாரம்

கடலுார்: செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசினார்.கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த 'தினமலர்' - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி பரிசளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: 'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில், நடத்தப்படும் வினாடி வினா போட்டி விழாவில் 3வது முறையாக பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக வலைதளங்கள் மிகவும் சக்திவாய்ந்த கருவிகள். இவற்றை மாணவர்கள் சரியான முறையில் கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டும். எனது முதல் வகுப்பு ஆசிரியர் கிளாரா. இவர், எனக்கு 'டிவி' யில் செய்தியை பாரக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். தினமும் பள்ளி துவங்கும் போதும் சரி, பள்ளி முடியும் போதும் சரி என்னிடம் என்ன செய்தி படித்தாய் என கேள்வி கேட்பார். இதன் மூலமாக செய்தித்தாள் படிக்கும் பழக்கம் எனக்கு சிறுவயதில் ஏற்பட்டது. அப்பழக்கம், எனது வாழ்நாள் முழுவதும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது. 'தினமலர்' நாளிதழ் சார்பில் மாணவர்களுக்காக பட்டம் இதழ் வெளியாகி வருகிறது. குறிப்பாக, போட்டித் தேர்வுகள் நடத்துவது என்பது மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். இது மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக 'தினமலர்' நாளிதழிற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.பள்ளி மாணவர்களாக உள்ள நீங்கள் கல்லுாரி படிப்பை முடித்து வேலைக்கு செல்வீர்கள். அப்போது, ஏதாவது ஒரு விஷயம் உங்களை துாங்க விடாமல் செய்யும். இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் 6ம் வகுப்பு பயின்ற போது, முக்கோணவியல் பாடம் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. 3 மாத பயிற்சிக்கு பிறகு முக்கோணவியல் பாடம் நன்றாக புரிந்தது. இதன் மூலமாக அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய எண்ணங்கள் தோன்றியது.10ம் வகுப்பை வெளிநாட்டில் முடித்து மீண்டும் தமிழகம் வந்தேன். மாநில வாரியான பாடத்திட்டம் மாற்றம் காரணமாக பிளஸ் 1ல் வகுப்பு கடினமாக இருந்தது. காலாண்டு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தேன். இதற்கு பரிகாரமாக பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் வேண்டும் என்ற குறி்க்கோள் ஏற்பட்டது. இதன் விளைவு பள்ளி அளவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தேன். கலெக்டராக பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கான ஏதாவது திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இலக்கை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும். இலக்கு இல்லையெனில் வாழ்க்கையில் முன்னேற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்