பெரியார் பல்கலையில் விடைத்தாள் திருத்துவதில் மோசடி: தேர்வு கட்டுப்பாட்டு ஊழியர் கைது
சேலம்: சேலம், பெரியார் பல்கலையில் "பேப்பர் சேசிங்" செய்ய பணம் வாங்கிய தேர்வுக் கட்டுப்பாட்டு ஊழியர் கைது செய்யப்பட்டார். சேலம், பெரியார் பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் தொகுப்பூதியப் பணியாளராக இருந்தவர் மனோஜ் பிரபாகர், 35; மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிபாரிசில், பணியில் சேர்ந்தார். இவர் கடந்த 2009ல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம், முறைகேடாகப் பணம் வாங்கி, இரவு நேரத்தில் விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்த போது, அப்போதைய துணைவேந்தர் தங்கராசுவிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். ஆனால், அரசியல் காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அம்மாபேட்டைப் பகுதியைச் சேர்ந்த பாலாஜி தன் நண்பருக்காக பி.எஸ்சி., கணிதப் பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண் போடுவதற்கு மனோஜ் பிரபாகருக்குச் சொந்தமான கம்ப்யூட்டர் சென்டரில் அவரைச் சந்தித்து 7,500 ரூபாய் லஞ்சமாகக் கொடுத்து உள்ளார். இதுகுறித்து, புகார் எழுந்ததால் விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இதில், "பேப்பர் சேசிங்" செய்ய பணம் பெற்றதை, மனோஜ் பிரபாகர் ஒப்புக் கொண்டு 7,500 ரூபாயைத் திரும்ப ஒப்படைத்தார். இதையடுத்து, இவர் மீது, நடவடிக்கை எடுக்க விசாரணைக்குழு பரிந்துரை செய்தது. இதை அடுத்து, துணைவேந்தர் முத்துச்செழியன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். மனோஜ் பிரபாகரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பல்கலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.