உள்ளூர் செய்திகள்

மோசடி செய்தால் உரிமை பறிக்கப்படும்: கேரள உயர் கல்வியில் புதிய திருப்பம்

திருவனந்தபுரம்: தன்னாட்சி கல்லூரிகள் தேர்வில் மோசடி நடத்தினால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பல்கலை., மற்றும் அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கேரளத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் தன்னாட்சி கல்லூரிகளுக்கு தேர்வு நடத்துவதில் முழு சுதந்திரம் அளிக்கும் நிலையை அரசு முறைப்படுத்தி உள்ளது. தேர்வில் மோசடி நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள பல்கலை.,களுக்கும், அரசிற்கும் அதிகாரம் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தன்னாட்சி கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் தயாரித்து தேர்வு நடத்த உரிமை உள்ளது. மேலும், தன்னாட்சி கல்லூரிகளே விடைத்தாள்களையும் திருத்தி மார்க் பட்டியல் தயாரித்து சம்பந்தப்பட்ட பல்கலை.,யில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், பல்கலை., அங்கீகரிக்கும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு டிகிரி மற்றும் டிப்ளோமா வழங்க உரிமை உண்டு. இதில் ஏதாவது மோசடி நடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமை ரத்து செய்யவோ, அல்லது சஸ்பென்ட் செய்யவோ அதிகாரம் உண்டு. கேரள பல்கலை., கோழிக்கோடு, எம்.ஜி., கண்ணூர் போன்ற பல்கலை.,களில் சட்ட திட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தி இந்த புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் தன்னாட்சி கல்லூரிகளில் கல்வி முறைகளில் சுயமாக முடிவு எடுக்கலாம். மேலும், பாடத்திட்டம் மற்றும் படிப்பிக்கும் முறையையும் தன்னாட்சி கல்லூரிகளே தீர்மானிக்கலாம். அரசு கல்லூரிகளுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்க விதிமுறைகளில் இடம் உள்ளது. இணைக்கப்பட்ட கல்லூரிகளின் மேலுள்ள அதிகாரங்களை போல், தன்னாட்சி கல்லூரிகள் மீதும் பல்கலை.,க்கு அதிகாரம் உண்டு. தன்னாட்சி கல்லூரிகள் யூ.ஜி.சி., விதிமுறைகளை பின்பற்றி நடக்கின்றனவா என பல்கலை., ஆராயும். மேலும், கல்லூரிகளில் உள்ள வசதிகளையும், ஆதாரங்கள் போன்றவற்றையும் பரிசோதனை நடத்த சம்பந்தப்பட்ட பல்கலை., க்கு உரிமை உண்டு. தகுதி உள்ள கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க யூ.ஜி.சி., யிடம் சிபாரிசு செய்ய கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை கவுன்சில், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் கன்வீனர் போன்றவர்கள் அனுமதி வழங்க வேண்டும். அனைத்து தன்னாட்சி கல்லூரிகளுக்கும் பாடப்பிரிவுகள், கல்வி முறைகள் போன்றவற்றை அக்காடமிக் கவுன்சில் தீர்மானிக்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்