உள்ளூர் செய்திகள்

அவசர மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆய்வு! ஐ.சி.எம்.ஆர்., நிறுவனம் களம் இறங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் அளிக்கப்படும் அவசர மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்யஐ.சி.எம்.ஆர்., சுகாதார துறையுடன் கைகோர்த்து, களம் இறங்கியுள்ளது.விபத்து, மாரடைப்பு போன்ற அவசர சூழ்நிலைகளில், ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமானது. ஆனால் புதுச்சேரியில் ஆட்டோ, பஸ், கார் போன்ற வாகனங்களில் மருத்துவமனைக்கு வந்து சேருவதற்கு சில மணி நேரம் காலதாமதம் ஏற்படுகிறது.இந்தத் தாமதம்தான் உயிர்ப் பலிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இதை மட்டும் தவிர்த்தால், இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களைக் காப்பாற்ற முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், புதுச்சேரியில் அளிக்கப்படும் அவசர மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்ய ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.இதற்காக புதுச்சேரி சுகாதார துறை, ஜிப்மர், அரசு மருத்துவ கல்லுாரியுடன் ஐ.சி.எம்.ஆர்., நிறுவனம் கைகோர்த்துள்ளது. இந்தியா - இ.எம்.எஸ்., என்ற திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ள ஐந்து இடங்களில் ஒன்றாக இந்த அவசர மருத்துவ சிகிச்சை ஆராய்ச்சியை புதுச்சேரியில் ஐ.சி.எம்.ஆர்., நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.இதற்காக புதுச்சேரியில் சிறப்பு மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் களம் இறக்கியுள்ளது. இவர்கள் தினமும் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய தரவுகளை சேகரித்து, வழிகாட்ட உள்ளனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ குறிப்புகளையும் பதிவு செய்ய உள்ளனர்.இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் ஒரு மணி நேரம்தான் உயிர் காக்கும் பொன்னான நேரம். அந்த நேரத்துக்குள் அவருக்குத் தேவையான முக்கிய சிகிச்சைகள் கிடைத்துவிட்டால், பிழைத்துக் கொள்வார். தவற விட்டால், மரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், மாரடைப்பு ஏற்பட்டவரின் உயிருக்கு ஆபத்து நெருங்கலாம். எனவே, எங்கு செல்வது எனத் தெரியாமல், பல மருத்துவமனைகளுக்கு அலைந்து நேரத்தை வீணாக்காமல், நெஞ்சுவலி ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் இதய நோய் மருத்துவரிடம் சென்றுவிட்டால், உயிர் பிழைக்கலாம்.இதேபோல் தான் சாலை விபத்தும். ஆனால் துரதிஷ்டவசமாக போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும்போது விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க வேண்டி நிலை ஏற்படுகிறது.இதுபோன்ற சூழ்நிலையில், புதுச்சேரியில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மருத்துவ வசதிகள், பொதுமக்களுக்கு கிடைக்கும் அவசர சிகிச்சைகள், ஏற்படுத்தப்பட வேண்டிய முன்னேற்றங்கள், அதிநவீன கருவிகள் உள்பட அனைத்து சூழல்களையும் ஐ.சி.எம்.ஆர்., நிறுவனம் விஞ்ஞானிகளை வைத்து ஆராய்ச்சி செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அவசர சிகிச்சைகள் அனைத்தும் மேம்படுத்துவதோடு, மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாகவும் அமையும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்