உள்ளூர் செய்திகள்

சட்ட தமிழ் அகராதி விரைவில் வெளியிடப்படும்: மாநில ஆணைய உறுப்பினர் பேச்சு

சூலுார்: சட்ட தமிழ் அகராதி விரைவில் வெளியிடப்படும் என, முன்னாள் நீதிபதியும் மாநில சட்ட மொழி ஆணைய உறுப்பினருமான முகமது ஜியாவுதீன் பேசினார்.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா நிகழ்ச்சிகள், கடந்த 18ந்தேதி துவங்கின. இன்று நிறைவு பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, சூலுார் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம் நடந்தது.தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அன்பரசி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் தேவி, துணைத்தலைவர் கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதியும், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய முழு நேர உறுப்பினருமான முகமது ஜியாவுதீன், ஆட்சி மொழி திட்டத்தை விளக்கி பேசியதாவது:ஒரு நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எந்த மொழி பேசுகிறார்களோ அந்த மொழி ஆட்சி மொழியாக இருக்கும். மன்னர் ஆட்சிக்காலம் முதலே, தமிழை பாதுகாக்க போராடி வருகிறோம். சுதந்திரத்துக்கு பிறகும், அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில்தான் கடித போக்குவரத்து இருந்தது.காமராஜர் முதல்வராக இருந்தபோது, 1956 டிச., 27 ல் ஆட்சி மொழி சட்டம் கொண்டு வரப்பட்டு, 1957 ஜன., 23 ம்தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.120 ஆண்டு கால போராட்டம் அப்போதுதான் நிறைவுக்கு வந்தது. இன்றும் தமிழ் என நினைத்து பிற மொழி சொற்களை கலந்து பேசுகிறோம். இந்த நிலை மாற வேண்டும். சீனர்கள், ஜப்பானியர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தங்கள் மொழியில்தான் பேசிகொள்வர். அதனால்தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.நம் தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்றால், முதலில் நாம் மாறவேண்டும். தாய் மொழி என்பது நமது உயிர் மூச்சு, அடையாளம் ஆகும். தமிழ் வளர்ச்சி துறையும், சட்ட ஆட்சி மொழி ஆணையமும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆணையத்தின் மூலம் சட்ட தமிழ் அகராதி விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்