உள்ளூர் செய்திகள்

மருத்துவக் கல்விக்கு உதவும் உடல் தானம்; நன்றி கூறும் விழாவில் நெகிழ்ச்சி

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஏராளமானோர் மருத்துவம் பயின்று வருகின்றனர். மருத்துவமனை உடற்கூறாய்வு பிரிவு சார்பில், உடல் தானம் செய்தோரின் குடும்பத்தினரை பாராட்டி, நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் (பொறுப்பு) டாக்டர் பத்மினி தலைமை வகித்தார். துணை முதல்வர் டாக்டர் அமுதா, நிலைய மருத்துவ அதிகாரி கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லுாரி உடற்கூராய்வு பிரிவு தலைவர் டாக்டர் சாவித்திரி, டாக்டர்கள் நளினி, ரம்யா ஆகியோர் பேசினர். பின், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.டாக்டர்கள் கூறியதாவது: அரசு மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்படும் உடலில் உள்ள பாகங்களை வைத்து தான், மருத்துவக்கல்லுரியில் உடற்கூறாய்வு படிக்கும் மருத்துவ மாணவ, மாணவியருக்கு, மருத்துவக்கல்வி கற்பிக்கப்படுகிறது. பொதுவாக, ஆதரவற்ற நிலையில், அனாதைகளாக இறந்து போவோரின் உடல்கள் தான், போலீசாரின் விசாரணைக்கு பின், தானமாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால், அவ்வகையிலான உடல்கள், அடிக்கடி தானமாக கிடைக்காது என்ற நிலையில், பல ஆண்டுகளாக உடல் தானம் ஊக்குவிக்கப்படுகிறது; அதுகுறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.உடல் தானம் வழங்குவோரின் கண், இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட சில உறுப்புகள் எடுக்கப்பட்டு, அந்த உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பெற்று வரும் பிறருக்கு பொருத்தி, அவர்களுக்கு மறுவாழ்வும் வழங்கப்படுகிறது. அதே நேரம், அந்த உடல்கள் மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவியரின் உடற்கூறு கல்வி சார்ந்தும் பயன்படுத்தப்படுகிறது.தற்போது உடல் தானம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், பலர், தங்களது குடும்பங்களில் இறந்து போவோரின் உடல்களை தானமாக வழங்குகின்றனர். இது மிகவும் பாராட்டுக்குரியது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்