உள்ளூர் செய்திகள்

துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு; மறுபரிசீலனை செய்ய முதல்வர் கோரிக்கை

சென்னை: 'துணை மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் ஆணையம், வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை, 'பிசியோதெரபி' மற்றும் இளங்கலை 'ஆக்குபேஷனல்தெரபி' ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வை கட்டாயமாக்கி உள்ளது.இந்த அவசரமான மற்றும் தன்னிச்சையான முடிவால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான நீட் தேர்வை, தமிழகம் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வருகிறது. மற்ற துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், தொடர்ச்சியாக எச்சரித்து வந்தது.துரதிர்ஷ்டவசமாக, தமிழகத்தின் அச்சம் இன்று உண்மையாகி விட்டது. ஒரு பெரிய திட்டத்தின் முதல் படியாக, இரண்டு படிப்புகளுக்கு நீட் தேர்வு பரிந்துரைக்கப்படுவதாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களில் இருந்து தெளிவாக தெரிகிறது.நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், 12,000 எம்.பி.பி.எஸ்., சீட்களுக்கு போட்டியிட, 1.40 லட்சம் மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையற்ற செலவு, மன அழுத்தம், பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த தவறான நடைமுறையை, துணை மருத்துவ படிப்புகளுக்கு விரிவுப்படுத்துவது என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும். தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை, 50 ஆயிரத்திற்கும் அதிகமாகும். இந்த இடங்களுக்கு சேர விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க விரும்பும் மாணவர்களை விட, மிகவும் பின்தங்கிய சமூக பொருளாதார பின்னணியை கொண்டவர்கள்.இந்த விஷயத்தின் அவசர தன்மையை கருத்தில் கொண்டு, பிரதமர் தலையிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.துணை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கூடாதுகூடுதல் கட்டணம் செலுத்த முடியாத ஏழை எளிய, கிராமப்புற மாணவ மாணவியர், துணை மருத்துவ படிப்புகளை படித்து வருகின்றனர். இதற்கும், வேட்டு வைக்கும் வகையில், மத்திய அரசு, அப்படிப்புகளுக்கும் நீட் தேர்வை அறிவித்துள்ளது.மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல், இது போன்ற உத்தரவை பிறப்பிப்பது, மாநில சுயாட்சிக்கு எதிரான செயல். மத்திய அரசின் இந்த நடவடிக்கை, வரும் காலத்தில், அனைத்து மருத்துவ துணை படிப்புகளுக்கும், நீட் தேர்வை நீட்டிக்க வழி வகுக்கும்.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, மக்கள் வலியுறுத்தும் நிலையில், மருத்துவ துணை படிப்புகளுக்கும், நீட் தேர்வை நடைமுறைப்படுத்துவது, தமிழக மக்களையும், கூடுதல் கட்டணம் செலுத்தி மருத்துவப் படிப்புகளை படிக்க முடியாதவர்களையும் புறக்கணிப்பதற்கு சமம்.எனவே, கிராமப்புற மாணவ, மாணவியர் நலனை கருத்தில் வைத்து, துணை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். - பன்னீர்செல்வம், தமிழக முன்னாள் முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்