வேலை வாய்ப்பு பதிவுகளுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் கலெக்டர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி: வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல் பணிகளை ஆன்லைனில் நேரடியாக செய்து கொள்ளலாம். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பிப்பு உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும், இணையதளத்தில் மனுதாரர்களே செய்து கொள்ளலாம். அத்துடன் வேலை வாய்ப்பு பதிவு, பதிவு புதுப்பிப்பு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் எவ்வித கட்டணமும் இன்றி செய்து கொள்ளலாம்.மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களால் எவ்வித கட்டணமின்றியும் பதிவு செய்யலாம்.அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தள முகவரியில் மனுதாரர்கள் அளவில் இலவசமாக செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் வாட்ஸ் ஆப், பேஸ் புக், யூடியூப், இன்ஸ்டாகிராம்களில் கானொளிகள் மூலமாக மேற்கூறிய சேவைகளை கட்டணத்தின் அடிப்படையில் செய்து தருவதாக தெரிவித்து விளம்பரங்கள் வருகின்றன. பொதுமக்கள் எவரும் இதுபோன்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி தனிப்பட்ட விபரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.