உள்ளூர் செய்திகள்

தினமலர் கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு வேலுார், தஞ்சாவூர் வாசகர்கள் பாராட்டு

பெங்களூரு: பெங்களூரு 'தினமலர்' அலுவலகத்தில் 'கடல் தாமரை' புத்தக பூங்கா நுாலகத்திற்கு வந்த வேலுார், தஞ்சாவூர் வாசகர்கள், 'தினமலர்' செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.பெங்களூரு சிவாஜி நகர் குயின்ஸ் சாலையில் உள்ள 'தினமலர்' அலுவலகத்தின் புத்தக பூங்கா நுாலகத்திற்கு, சென்னை செங்கல்பட்டை பூர்வீகமாக கொண்ட மாதவமூர்த்தி, 70. அவரின் தந்தை தாசில்தாராக இருந்ததால், வேலுாரில் குடியேறினர். மாதவமூர்த்தி, தமிழக கூட்டுறவு சங்க தணிக்கை துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.எம்.ஜி.ஆர்., ரசிகர் பெங்களூரில் உள்ள தனது மகனின் வீட்டுக்கு வந்த அவர், நேற்று 'தினமலர்' அலுவலகத்திற்கு வந்தார். நுாலகத்தில் இருந்த புத்தகங்களை பார்த்த அவர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பதால், அவர் தொடர்பான புத்தகங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.அவர் கூறியதாவது:நான், 7ம் வகுப்பு படிக்கும் போதே புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். தாசில்தாராக இருந்த என் தந்தை, தினமும் தமிழ், ஆங்கில நாளிதழ்களை வாங்குவார். அந்த நாளிதழ்களை படிக்க துவங்கினேன். பல தலைவர்களின் புத்தகங்களை படித்துள்ளேன்.நான் வாங்கும் புத்தகங்களை, என்னுடன் அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்கு வழங்குவேன். அவர்களிடம் ஏதாவது புத்தகம் இருந்தால், நான் வாங்கி செல்வேன். ஒரு வாரத்தில் புத்தகங்களை மாற்றிக் கொள்வோம்.கடல் தாமரை புத்தக பூங்காவில் இவ்வளவு புத்தகம் இருக்கும் என்று நினைக்கவில்லை. நான் இதுவரை படிக்காத பல புத்தகங்கள் இங்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நுாலகத்தில் புத்தக விற்பனையை துவக்குங்கள். உறுப்பினர் சேர்க்கையை துவக்கினால் நன்றாக இருக்கும். இங்கிருந்து படிப்பதை விட, வீட்டுக்கு எடுத்து சென்று படிக்க பலரும் விரும்புவர்.இவ்வாறு அவர் கூறினார்.தஞ்சாவூர் டவுனை சேர்ந்தவர் பாஸ்கரன், 72, இவரின் மகள் பெங்களூரில் வசிப்பதால், அவரை பார்க்க, பாஸ்கரனும், அவரது மகன் ராம்பிரசாத்தும் பெங்களூரு வந்தனர். 'தினமலர்' வாசகரான பாஸ்கரன், கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் அறிந்து, தனது மகனுடன், நேற்று நம் நுாலகத்திற்கு வந்தனர். சிறிது நேரம் நுாலகத்தில் உள்ள புத்தகங்களை படித்தனர்.பின், பாஸ்கரன் கூறியதாவது:சிறு வயதில் இருந்தே நாளிதழ் படிக்க துவங்கினேன். எங்கள் ஊரில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நுாலகம் அமைத்திருந்தனர். நான், 8ம் வகுப்பு படிக்கும் போதிருந்தே, வாசிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.நுாலக பொறுப்பு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு என் மீது நல்ல அபிப்ராயம் என்பதால், நுாலகத்தை பார்த்து கொள்ளும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். கிராம பஞ்சாயத்துகளில் ரேடியோ இருக்கும். செய்தி தொடர்பாக தெரிந்து கொள்ள ரேடியோவை, 'ஆன்' செய்வேன்.அப்போதெல்லாம் நுாலகத்திற்கு படிக்க வருவோர் குறைவு தான். எனவே, நானாக, குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கி வந்தேன். சிலர் குறிப்பிட்ட புத்தகங்களை கேட்பர், அதை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவேன்.எனக்கு மன சோர்வு ஏற்படும்போதெல்லாம், புத்தகம் வாசிப்பேன். அப்போது, மன சோர்வு நீங்கிவிடும். விழிப்புணர்வு, நீதி கதைகள், அரசியல் போன்ற புத்தகங்கள் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். எனக்கு சுதந்திர போராட்ட வரலாறுகள் படிப்பதில் ஆர்வம் இருக்கும்.தினமும் 'தினமலர்' நாளிதழை அரை மணி நேரம் படித்தால் மன சோர்வு நீங்கிடும்; நாட்டு நடப்பு, உலக நடப்புகள் செய்திகள் நன்றாக உள்ளது. செய்திகள் நிறைய உள்ளன. தினமும் நாட்டின் நடப்பு, நாட்டுப்பற்று குறித்து கட்டுரைகள் வந்தால் நன்றாக இருக்கும்.இளைஞர்கள் மொபைல் போன், டிவி பார்ப்பதில் நேரம் செலவழிக்கின்றனர். மொபைல் போன், டிவி பார்க்க கூடாது என்று கூறவில்லை. பார்க்கும் நேரத்தை குறைத்து கொண்டால் நன்றாக இருக்கும். நமக்கு தேவையானதை மட்டும் பார்க்க வேண்டும்.எங்கள் காலத்தில் கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு ஆசிரியரிடமும், மருந்து தொடர்பான சந்தேகங்களுக்கு டாக்டரிடம் சென்று தெரிந்து கொள்வோம். ஆனால் இன்று அப்படி அல்ல. சந்தேகம் என்றால் உடனே மொபைல் போனில் தெரிந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது.நுாலகம் தொடர்பாக 83108 60601, 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்