உள்ளூர் செய்திகள்

பாடப்புத்தகம் மாயமான விவகாரம்: முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி உள்பட 7 பேருக்கு சம்மன்

கோவை: கோவையில் 350 டன் பள்ளி பாடப்புத்தகம் மாயமான விவகாரத்தில், முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி உள்பட ஏழு பேருக்கு, மாநகர குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கோவை ஒண்டிப்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புலியகுளம் ஆர்.சி.ஆண்கள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 350 டன் எடையுள்ள, சமச்சீர் கல்வி அல்லாத பழைய பாடதிட்ட புத்தகங்கள் மாயமானது. இதுகுறித்து அப்போதைய முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரனிடம் பள்ளி கல்வித்துறை விளக்கம் கேட்டது. அவர் உரிய பதில் அளிக்காததால், பாடபுத்தகங்களில் கையாடல் நடந்தது தெரிந்தது. இதற்காக கடந்த 17 ம் தேதி சென்னையில் முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றிய ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தற்போதைய கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன், சி.இ.ஓ., அலுவலக இளநிலை உதவியாளர் சரவணன், பாடபுத்தக சூப்பர்வைசர் அருள்ஜோதி, பள்ளி துணை ஆய்வாளர் சாலமன் பிரின்ஸ், பதிவு எழுத்தர் சேதுராமலிங்கம், தமிழ்நாடு பாடபுத்தக கார்ப்பரேஷன் தனி அலுவலர் கார்த்திகேயன், புலியகுளம் பள்ளி தலைமையாசிரியர் லுார்து சேவியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சூழலில், வழக்கு பதிவு செய்யப்பட்ட ஏழு பேரும் நேரில் ஆஜராகுமாறு, மாநகர குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். லுார்து சேவியர் மற்றும் சாலமன் பிரின்ஸ் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாங்கி, ஆஜர் ஆவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மாயமான புத்தகங்கள் கோவைக்கு எப்போது வந்தன, எப்படி கொண்டு வரப்பட்டன என்பன உள்ளிட்ட விபரங்களை கேட்டு, தற்போதைய முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகர குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், "பாடபுத்தகங்கள் மாயமானதில் வேறு சில கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். வழக்கு பதிவு செய்தவர்களுக்கு சம்மன் அனுப்பி, நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது" என்றனர். குறிப்பிட்ட குடோனில் 80 முதல் 90 டன் அளவுக்கு மட்டுமே பாடபுத்தகங்கள் வைக்க இடம் இருந்த நிலையில், 350 டன் புத்தகம் எவ்வாறு வைக்க முடிந்தது, அந்த குடோனில் உண்மையிலேயே 350 டன் புத்தகம் வைக்கப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்