உள்ளூர் செய்திகள்

டிப்ளமோ நர்சிங் கலந்தாய்வில் குழப்பம் பெற்றோர், மாணவிகள் சாலை மறியல்

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 1,950 இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. "அழைப்புக் கடிதம் கிடைக்காதோரும், தர வரிசைப்பட்டியல் படி, வந்து பங்கேற்கலாம்" என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஏராளமான மாணவியர் வந்திருந்தனர். பிளஸ் 2 வில், நர்சிங் படித்து, தரவரிசையில் இடம் பெற்ற மாணவியரும், டிப்ளமோ கலந்தாய்வில் பங்கேற்கும் கனவில் வந்திருந்தனர். ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. "புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2வில் நர்சிங் படித்தோர், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு சேர்க்கப்படவில்லை" என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த மாணவியர், பெற்றோர் ஏராளமானோர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களிடம் பேசி, கல்லூரி வளாகத்திற்குள் அனுப்பினர். இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக்குழு செயலர் சுகுமார் கூறுகையில், "பிளஸ் 2, அறிவியல் பிரிவு படித்தோர் தவிர, பிளஸ் 2வில், ஒக்கேஷனல் படிப்பாக, நர்சிங் படித்தோரை சேர்ப்பதில்லை என, விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பவில்லை. 7,000த்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் உள்ளன. பிளஸ் 2 நர்சிங் படித்தோரை சேர்க்க வாய்ப்பில்லை" என்றார். மாணவி சுபா, "நான், பிளஸ் 2வில் நர்சிங் படித்து, 1,077 மதிப்பெண் பெற்றுள்ளேன். தர வரிசையிலும் முன்னணியில் உள்ளேன். எளிதாக டிப்ளமோ நர்சிங் கிடைக்கும் என, வேறு படிப்புகளுக்கு முயற்சிக்கவில்லை. கல்லூரிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதால், சாதாரண பட்டப்படிப்புக்கும் போக முடியாது; எதிர்காலம் என்ன ஆகுமோ..." என அழுதபடி கூறினர். பெற்றோர் தரப்பில், "பிளஸ் 2வில் நர்சிங் படித்தோர், டிப்ளமோ நர்சிங்கில் சேர்க்க மாட்டோம் என, முன்பே அறிவித்திருந்தால் பிரச்னை வந்திருக்காது. பல ஆண்டுகளாக மாணவர்களை சேர்த்துவிட்டு, இந்த ஆண்டு புதிய விதிமுறை அமல்படுத்துவது சரியல்ல. குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்