கால்பந்து விளையாட்டு - நல்ல வாய்ப்புகளை வழங்கும் துறை
தற்போதைய உலகக் கோப்பை கால்பந்து போட்டி(FIFA 2014), கால்பந்தின் சொர்க்க பூமி என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டில் நடைபெற்று வருவது நம் அனைவருக்கும் தெரியும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, வடஅமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில், கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம். அதிலும் சில நாடுகளில், பொழுதுபோக்கே கால்பந்துதான். ஆசிய கண்டத்தை எடுத்துக் கொண்டால், தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு தகுதிபெறும் அளவிற்கு சிறந்து விளங்குபவை. எனவே, உலகில் இந்தளவு பெயர்பெற்று விளங்கும் ஒரு விளையாட்டில், தங்களின் எதிர்கால தொழிலை தேர்வுசெய்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தங்களுக்கான வாய்ப்புகள் பற்றி கவலைப்பட வேண்டுமா? கால்பந்து விளையாட்டில் நல்ல திறமையும், கடின உழைப்பிற்கான உற்சாகமும், உங்களின் நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கான விருப்பமும் இருந்தால், நீங்கள் தாராளமாக ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக உருவெடுக்கலாம். திறனாளிகளை கண்டறிதல் பொதுவாக, கால்பந்து விளையாட்டிற்கான பயிற்சி, இளம் வயதிலேயே தொடங்கி விடுகிறது. தொழில்முறை கால்பந்து கிளப்புகள், திறமை வாய்ந்த இளம் கால்பந்து வீரர்களை கண்டறிவதற்காக, கைடுகளை அமர்த்தும். அவ்வாறு கண்டறியப்படுபவர்கள், சோதனைக்கு அழைக்கப்படுவார்கள். சோதனைகளில் தேர்ச்சிப் பெறுவோருக்கு, இளம் விளையாட்டு வீரராக சேர்ந்து கொள்ளும்படி அழைப்பு வரும். இதனையடுத்து, தங்களின் திறமையை சரியாக முன்னேற்றிக் கொள்ளும் பட்சத்தில், குறிப்பிட்ட வயதை அடைந்ததும், தொழில்முறை கால்பந்து வீரராக உருவெடுக்கலாம். பணி * லீக் போட்டிகளில் பிற அணிகளுக்கு எதிராக விளையாடுதல்* விளையாட்டுத் திறன்கள் மற்றும் பொது உடல் கட்டமைப்பை மேம்படுத்திக்கொள்ள, விரிவான முறையிலான தொடர் பயிற்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்வது.* திட்டங்களை தீட்டுதல், கால்பந்து விளையாட்டு போட்டிகளில் வீடியோக்களைப் பார்த்து, பகுப்பாய்வு செய்து, உங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்து அறிந்து கொள்ளுதல்.* பிசியோதெரபிஸ்ட்டுகள், விளையாட்டு உளவியல் வல்லுநர்கள், கோச்சுகள் மற்றும் அணி மேலாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு, நமது உடல்திறன், மனநலன், விளையாட்டுத் திறன் மற்றும் அதுகுறித்த நுணுக்க அறிவு ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்வது அவசியம்.* ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசித்து, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை குறித்த திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டும். உழைக்கும் காலம் ஒரு கால்பந்து வீரர், போட்டிகளில், மாலை நேரங்களில் அல்லது வார இறுதி நாட்களில் விளையாடுகிறார். ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கை மிகவும் அலைச்சல் நிறைந்தது. அவர், தனது கிளப் அல்லது தேசிய அணியுடன், போட்டிகளுக்காக, பல்வேறு இடங்கள் அல்லது பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கும். கால்பந்தைப் பொறுத்தவரை, ஒரு விளையாட்டு வீரர், தினமும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவரின் உடல்திறன் சரியான நிலையில் பாதுகாக்கப்படுவதோடு, மனத்திறமும் சிறப்பாக இருக்கும். வருமானம் ஒரு வீரரின் புகழ், அவர் பங்கேற்கும் விளையாட்டின் தன்மை, தனிப்பட்ட திறன்கள் மற்றும் விளையாட்டுத் திறமைகள் ஆகியவற்றைப் பொறுத்து, வருமானம் வேறுபடுகிறது. மேலும், கிளப்புகள் சார்பாக விளையாடும் வீரர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் கிளப்புகள் மற்றும் தங்களுக்கான முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து வருமானம் பெறுவார்கள். விளையாட்டில், ஒரு வீரரின் செயல்பாடு, காட்சிக் கட்டணம்(appearance fees), அங்கீகாரம், ஸ்பான்சர்ஷிப் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் ஆகிய பலவகை வாய்ப்புகளின் மூலம், கால்பந்து விளையாட்டு வீரர் வருமானம் பார்க்கலாம். உலகில் எத்தனையோ கால்பந்து வீரர்கள் இருந்தாலும், பிரபலமாக அறியப்படும் வீரர்களாக சிலர் இருக்கிறார்கள். பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலே, ஜிகோ, ரொனால்டோ, ரொமாரியோ, ரொனால்டினோ மற்றும் இன்று அந்நாட்டிற்காக விளையாடும் நெய்மர் போன்றோர் புகழப்படுகிறார்கள். அர்ஜெண்டினாவைப் பொறுத்தவரை, மாரடோனா மற்றும் இன்றைய மெஸ்ஸி ஆகியோர் புகழப்படுகிறார்கள். பிரான்ஸ் நாட்டின் ஜினடின் ஜிடேன் புகழ்பெற்றவர். போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜெர்மனியின் முல்லர் மற்றும் நெதர்லாந்து நாட்டின் ராபென் ஆகியோர் புகழ்பெற்று விளங்குகிறார்கள். இவர்கள் தவிர்த்து, இன்னும் பல நாடுகளைச் சேர்ந்த பல கால்பந்து விளையாட்டு வீரர்கள், தங்களின் விளையாட்டுத் திறத்தால், பிறரைவிட புகழ்பெற்று திகழ்கிறார்கள். இவர்களின் புகழைப் பொறுத்து, இவர்களுக்கான வருமானமும் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி மற்றும் மேம்பாடு உங்களின் வயது 16 முதல் 18 வயதுவரை இருந்தால், Advanced Apprenticeship in Sporting Excellence (AASE) திட்டத்தின் கீழ், பயிற்சி பெறலாம். மேலும், Level 3 (NVQ) Diploma என்ற நிலையை நோக்கி பணியாற்றி, விளையாட்டு திறத்தில் நுணுக்கம் பெறலாம். நீங்கள் கால்பந்து விளையாட்டை உங்களின் தொழிலாக மாற்றிக்கொள்ள விரும்பினால், உங்களின் ஆர்வத்தை எப்போதும் தக்கவைத்துக் கொண்டு, பல்வேறான நிலைகளில் விளையாடி, கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, புகழ்பெற்ற கால்பந்து அகடமிகளில் சேர்ந்து, உங்களின் திறன்களை வளர்த்து, அதன்மூலம், நல்ல ஊதியம் பெறும் ஒரு கால்பந்து நிபுணராக உருவாகலாம். ஒரு கால்பந்து வீரர், மிகவும் கடினமான மற்றும் கட்டுப்பாடான பயிற்சி முறைகளை கடைபிடித்து, தனது உடல் மற்றும் மனத்திறன்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு கால்பந்து வீரராக உருவாக வேண்டுமெனில்... * சிறந்த கால்பந்து விளையாட்டுத் திறனை கொண்டிருத்தல்* போட்டியிடுவதன் மீதான அதீத ஆர்வம் இருத்தல்* சுய ஒழுக்க கட்டுப்பாடு இருத்தல்* விளையாட்டின் மீதான ஆர்வம் கொண்டிருத்தல்* தனது திறனை மேம்படுத்திக் கொள்வதன் பொருட்டு, ஒருவர் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை கொண்டிருத்தல்* சிறந்த குழு செயல்பாட்டு திறமைகளை பெற்றிருத்தல்* நல்ல நிலையிலான உடல் திறன் மற்றும் செயல்பாட்டு ஆற்றலை பெற்றிருத்தல்* அழுத்தமான சூழலில் பதறாமல் செயல்படும் திறன் இருத்தல்* மனஉறுதி மற்றும் நிலைத்தன்மை பெற்றிருத்தல்* சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டிருத்தல்* தோல்விகளை வெற்றிகொள்ளும் மனப்பாங்கு இருத்தல்* தனது திறனாற்றலை சரியான திசையில் செலவிடும் தன்மை கொண்டிருத்தல்* விளையாட்டில் முழு கவனத்துடன் இருக்கும் ஆற்றல் பெற்றிருத்தல் வாய்ப்புகள் விளையாட்டு என்பது, விஸ்தாரமான உடல்திறன் தேவைப்படும் ஒரு நடவடிக்கை. அதுவும், கால்பந்து போன்ற விளையாட்டிற்கு தேவைப்படும் உட்சபட்ச உடல்திறன் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. (கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை நாம் இந்த கணக்கில் சேர்க்க வேண்டியதில்லை). ஒரு நல்ல கால்பந்து வீரருக்கு, வருமானத்தைப் பற்றி எந்த கவலையுமில்லை. அதேசமயம், ஒரு கால்பந்து வீரரின், தொழில்முறை காலகட்டம் குறைவாகவே உள்ளது. 30 வயதை தாண்டியவுடன் பலரின் சர்வதேச தொழில்முறை கால்பந்து வாய்ப்புகள் முடிவுக்கு வருகின்றன. அந்த வயதை அடைந்தவர்கள், ஓய்வுபெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், சில கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும், எதிர்பாராத வகையிலான பெரிய காயங்களும், அவரின் சர்வதேச போட்டி வாய்ப்புகளை, கூடிய விரைவிலேயே முடிவுக்கு கொண்டு வருகின்றன.