கல்லூரியில் பல ஆண்டுகளாக விளையாட்டு ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பாதிப்பு
திருப்பூர்: அரசு கலைக் கல்லூரியில், பல ஆண்டுகளாக விளையாட்டு ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பாதிப்படைகின்றனர். திருப்பூரிலுள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பாட பிரிவுகளில், 2,700 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; இதில் பலரும் விளையாட்டில் ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். ஆனால், கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, விளையாட்டு ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. பொருளாதாரவியல் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவரே, கூடுதல் பொறுப்பாக விளையாட்டு ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். கூடுதல் பொறுப்பாக இருப்பதால், விளையாட்டுக்கு அவரால் போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை. விளையாட்டு பிரிவுக்கு என, தனியாக ஆசிரியர் இல்லாததால் ஆர்வம் உள்ள மாணவர்கள், விளையாட வாய்ப்பின்றி தவிக்கின்றனர். பல ஆண்டுகளாக, விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படாததால், மாணவ, மாணவியர் ஏமாற்றத்தில் இருந்தனர். சமீபத்தில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளபோதும், அவை இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. கபடி, வாலிபால், கோ-கோ மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகளில் பிரகாசிக்க வாய்ப்பிருந்தும், விளையாட்டு ஆசிரியர் வழிகாட்டுதல் இல்லாததால், பல மாணவ, மாணவியர் ஏமாற்றத்தில் உள்ளனர். விளையாட்டு துறையில் சிறந்த மாணவர்களுக்கு உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளித்து இடம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக சிக்கண்ணா அரசு கல்லூரியில், விளையாட்டு ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவலத்தை போக்கும் வகையில், சிக்கண்ணா அரசு கல்லூரிக்கு விரைவில் விளையாட்டு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.