அண்ணாமலை பல்கலையில் போலி சான்றிதழ் மூலம் பணிபுரிந்தோர் அதிரடி டிஸ்மிஸ்
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலையில், போலி சான்றிதழ் கொடுத்து, வேலை பார்த்து வந்த உதவி பேராசிரியர், ஊழியர் உட்பட ஒன்பது பேரை, பல்கலை நிர்வாகம், அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, கடந்த 2013ம் ஆண்டு முதல், தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவ்தாஸ் மீனா, நிர்வாக சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். களை எடுப்பு தீவிரம் பல்கலையை அரசு ஏற்றது முதல், பல்கலையில் நடந்துள்ள பல முறைகேடுகளை கண்டுபிடித்து, களையெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2006ம் ஆண்டு முதல், பணியில் சேர்ந்த ஆசிரியர், ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், 1,800க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்கள் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டு, தனி பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி, இரு மாதங்களுக்கு முன், போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக, ஏழு, தனி அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்; 15க்கும் மேற்பட்டோர் தாமாகவே விலகிக் கொண்டனர். இந்நிலையில், நிர்வாக சிறப்பு அதிகாரி சிவ்தாஸ் மீனா, ஒன்பது பேரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். டுபாக்கூர் ஆசிரியர் விவரம் பல்கலையின், தொலைதுார கல்வி இயக்கக வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் சுப்ரமணியன், ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் ராஜ்மோகன் உள்ளிட்ட நான்கு பேர், நிர்வாகத்துறை ஊழியர் அப்பாதுரை, நுாலகர் பாண்டியன், தனி அதிகாரி அருண் உட்பட ஐந்து பேர் என மொத்தம் ஒன்பது பேர், டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.