புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை மருத்துவத்துக்கு பயன்படுத்த அறிவியல் துறை உதவும்
கோவை: புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை மருத்துவத்துக்கு பயன்படுத்த, இந்திய அறிவியல் துறை உதவிபுரியும் என, இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசினார். கோவையில் நரம்பியல் துறை டாக்டர்களின் இரண்டு நாள் மாநாடு துவங்கியது. இதில், இந்திய நரம்பியல் மருத்துவ சங்கத்தின் சார்பில், நிஸ்கான் 2014 என்ற தலைப்பிலான கருத்தரங்கை துவக்கி வைத்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் பேசியதாவது: உலகம் முழுவதிலும் நரம்பியல் பிரச்னைகளால், பத்து கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான மருத்துவச்செலவு, ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடிக்கும் மேல் ஆகிறது. இருப்பினும், அறிவியலுக்கு சவாலாக ஆட்டிசம் போன்ற பாதிப்புகள் இருந்து வருகின்றன. இந்திய மருத்துவத்துறை பழமை வாய்ந்தது. மருத்துவ துறையில் சாதித்தவர்கள் மட்டுமின்றி, போதித்தவர்களுமே போற்றுதலுக்கு உரியவர்கள். இவர்களை பாராட்டி கவுரவிப்பது ஒவ்வொருவருடைய கடமை. தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில், மருத்துவத்திலும் பல்வேறு முன்னேற்றங்கள் உருவாகியுள்ளன. இத்தகைய அறிவியல் தொழில்நுட்பங்களை, மருத்துவத்துக்கு பயன்படுத்த, இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை உதவி புரியும். இவ்வாறு, அவர் பேசினார். விழாவில் பங்கேற்ற இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பேசுகையில், "மருத்துவ துறையில் அறிவியலின் பங்கு அதிகம். புதிய மருத்துவம் கண்டறிவது முதல், நோயை குணப்படுத்துவது வரை பெரும் பங்களிப்பு அறிவியல், தொழில்நுட்பங்களுக்கு உள்ளது. நானோ தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் பயன்பாடுகள் போன்றவை மருத்துவத்துறையை மேலும் மேம்படுத்தும்" என்றார். இரண்டு நாள் கருத்தரங்கில், இந்திய அளவிலான டாக்டர்கள் பங்கேற்று, நரம்பியல் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதித்தனர்.