பச்சையப்பன் கல்லுாரியை அரசே ஏற்று நடத்தக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கீழ்ப்பாக்கம்: சென்னை, பச்சையப்பன் கல்லுாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்து, மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை பச்சையப்பன் கல்லுாரியை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோரி, நேற்று காலை கல்லுாரி வளாகத்தில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து, மாணவர்கள் கூறியதாவது: சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லுாரிகளில், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. அறக்கட்டளை நிர்வாகிகள், ஊழலில் திளைக்கின்றனர். மாணவர்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கும் ஆசிரியர்களை, இடமாற்றம் செய்வது, மெமோ கொடுப்பது உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளில் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபடுகிறது. எனவே, அரசு உடனடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்கவும்; மாணவர்களுக்கு, அடிப்படை வசதிகள் ஏற்படவும் வழி செய்யும் வகையில், கல்லுாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதற்கிடையே விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக, நாளை முதல் வரும் 28ம் தேதி வரை, கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.