அழிந்துவரும் மருத்துவ மரங்களை பாதுகாக்கும் முயற்சியில் காந்தி கிராம பல்கலை
காந்திகிராமம்: மேற்கு தொடர்ச்சி மலையில் அழிந்துவரும் மருத்துவ குணம் கொண்ட மரங்களை பாதுகாக்கும் முயற்சியில் காந்தி கிராம பல்கலை ஈடுபட்டுள்ளது. உலகளவில் மங்குஸ்தான் பழ குடும்பத்தில் 200 வகை மரங்கள் உள்ளன. இதில் 25 வகைகள் இந்தியாவில் உள்ளன. இந்தவகை மரங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் (அகஸ்தியர் மலை) குற்றாலம் முதல் கேரளாவின் தென்மலை வரை காணப்படுகின்றன. கார்சீனியா இம்பர்டி, கார்சினியா டிராவன்கோரிகா ஆகியவை அழிந்துவரும் மரங்களாக ஐ.நா., இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த மரங்களை பாதுகாக்கும் முயற்சியில் காந்திகிராம பல்கலை உயிரியல் துறை உதவி பேராசிரியர் ராமசுப்பு, ஆராய்ச்சியாளர் மணிகண்டன் ஈடுபட்டுள்ளனர். விதைகளை சேகரித்து அகஸ்தியர் மலைபகுதியில் 100 ச.மீ., அளவில் இரு குடில்களை அமைத்து மரக்கன்றுகளை வளர்த்து அதே பகுதியில் நடவு செய்து வருகின்றனர். பேராசிரியர் ராமசுப்பு கூறியதாவது: கார்சீனியா இம்பர்டி மரங்கள் 213ம், கார்சினியா டிராவன்கோரிகா மரங்கள் 296 மட்டுமே உள்ளன. இவை அகஸ்தியர் மலையில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த மரங்களின் பட்டை, இலை மருந்தாக பயன்படுகிறது. மரங்களில் இருந்து கிடைக்கும் ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் கொழுப்பு சத்தை குறைக்க கூடியது. மருந்துக்காக ஆதிவாசிகள் துணையோடு சிலர் மரங்களை அழித்து வருகின்றனர். இந்த மரங்களுக்கு விதை உருவாக்கும் திறன் குறைவாக உள்ளது. விதைகளை மலபார் அணில்கள் தின்றுவிடுகின்றன. ஆண், பெண் பூக்கள் வெவ்வேறு இடத்தில் இருப்பதால் எளிதில் மகரந்த சேர்க்கை நடப்பதில்லை. இதனால் மரங்கள் அழிந்து வருகின்றன. அங்குள்ள சீதோஷ்ண நிலையில் மட்டுமே செடிகளை உருவாக்க முடியும். இதனால் மலைப்பகுதியில் மரக்கன்றுகளை வளர்த்து வருகிறோம். 25 சதவீத விதைகள் மட்டுமே முளைக்கின்றன. தற்போது திசுவளர்ப்பு மூலம் மரக்கன்று உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.