மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில், திருப்பூர் மாவட்ட அணி பங்கேற்பு
திருப்பூர்: தூத்துக்குடியில் இன்று துவங்கும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில், திருப்பூர் மாவட்ட அணி பங்கேற்கிறது. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. நடப்பாண்டு 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் மாணவ, மாணவியர் பிரிவுகளில், குறுமைய, மாவட்ட மற்றும் மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. கூடைப்பந்து, ஹாக்கி, ஹேண்ட்பால், த்ரோபால், பால் பேட்மின்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், கபடி, கோ-கோ, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளும்; புதிதாக வாள் சண்டை, குத்துச்சண்டை, சிலம்பம், டேக்வாண்டோ, வளைபந்து, ஜூடோ, நீச்சல், கேரம், செஸ் உள்ளிட்ட போட்டிகளும் இடம்பெற்றன. வெற்றி பெற்ற அணிகள், தூத்துக்குடியில் இன்று துவங்க உள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன. அறிமுக விளையாட்டு போட்டிகளான டேக்வாண்டோ, வாள் சண்டை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற திருப்பூர் மாவட்ட அணி, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோல், 27, 28, 29ல் சிவகங்கையில் மாநில அளவிலான ஜூடோ, நீச்சல், கேரம், ரோடு சைக்கிளிங் போட்டிகள் நடைபெற உள்ளன.