மருத்துவ தேர்வு; மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
புதுச்சேரி: மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என, முன்னாள் எம்.பி.,ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தேசிய பொது நுழைவு தேர்வின் மூலம் நடைபெறும் என்ற முடிவு துரதிருஷ்டவசமானது. இது புதுச்சேரி மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேசிய அளவில் ஒரே மாதிரியான பொது தேர்வு என்றால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம், ஒரே கல்விச் சூழல் நிலவ வேண்டும். ஆனால், 29 மாநிலங்களில் 7 யூனியன் பிரதேசங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. பல்வேறு மொழிகளில் சமூக சூழ்நிலைகளில் போதிக்கப்படுகின்றன. எனவே இது சம்பந்தமாக கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து மத்திய அரசு ஆராய வேண்டும். புதுச்சேரியை பொருத்தவரையில் கவர்னர், தலைமை செயலர் உள்ளிட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி, தமிழக அரசு செய்துள்ளதுபோல், சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவில் யூனியன் பிரதேசத்ததில் நிலவும் வெவ்வேறு மாநில பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதை குறிப்பிட வேண்டும். அது சமூக ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் என்பதையும் குறிப்பிட்டு பொது நுழைவு தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வலியுறுத்த வேண்டும். விலக்கு அளிக்காத பட்சத்தில் புதுச்சேரி அரசு, அதன் பாடத்திட்டதிற்கேற்ப நுழைவுத் தேர்வினை நடத்திக் கொள்ள அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.