டிஜிட்டல் வகுப்புகள் இணையதள வசதியின்றி முடங்கியது! வீணாகும் நிதி
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி மூன்று பள்ளிகளில் இணையதள வசதியின்றி ரூ. 35 லட்சத்தில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் வகுப்பறைகள் பயன்படுத்த முடியாமல் முடங்கி உள்ளது.பெரியகுளம் நகராட்சியில் தென்கரை 10ம் பகுதி பள்ளி, வடகரையில் 3 ம்பகுதி பள்ளி, 7 ம் பகுதி பள்ளி என மூன்று நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் பகுதி பள்ளியில் நகராட்சி கல்வி நிதியில், ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் ஏ.சி., வசதியுடன் டிஜிட்டல் போர்டுடன் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் வகுப்பறைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து 7 ம் பகுதி, 3 ம் பகுதி பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டன.இணைய வசதி இல்லைரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் வகுப்பறைகளுக்கு நகராட்சி நிர்வாகம் ஆன்லைன் இணைப்பு வழங்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் 8 மாதங்களாக தங்கள் அலைபேசியில் இருந்து ஆன்லைன் இணைப்பு கொடுத்து இணையதளம் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.இதன் மூலம் பாடல்கள், ஓவியம், தன்னம்பிக்கை வகுப்புகள், ஆசிரியர்கள் பேச்சுக்களை கேட்கும் வசதி, வெளிநாடுகளில் நடக்கும் கல்வி ஆலோசனைகளை டிஜிட்டல் போர்டில் காண முடிந்தது.தினமும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கு டிஜிட்டல் வகுப்பறையில் 45 நிமிடம் பாடம் நடத்தப்பட்டது. மாணவர்கள் இந்த டிஜிட்டல் பலகையினை தொட்டு எளிதாக படம் வரைந்தும் தவறுதலாக வரைந்தால் ஒரு நொடியில் அதனை சரி செய்தும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.நிறுத்தம்ஆசிரியர்கள் தங்கள் அலைபேசியில் மூலம் இணைப்பு வழங்கி நெட் பயன்படுத்தினர். இதனால் அவர்களுக்கு சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியவில்லை. படிப்படியாக டிஜிட்டல் பாடங்கள் நடத்துவது குறைந்து தற்போது செயல்பாடு இன்றி முடங்கியுள்ளது.10 ம் பகுதி நகராட்சி பள்ளி தலைமையாசிரியர் நக்கீரன் கூறுகையில்: குதிரை வாங்கி விட்டு சாட்டை வாங்காத சொல்லாடலுக்கு ஏற்ப பல லட்சம் செலவில் நவீன வகுப்பறைகள் உருவாக்கி விட்டு இதற்கு ஆன்லைன் இணைப்பு வழங்கவில்லை. தினமும் 4 முதல் 5 ஜி.பி., வழங்கினால் ஸ்மார்ட் கிளாசில் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இது குறித்து பல முறை நகராட்சியில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.