திருவள்ளூர் மருத்துவ கல்லுாரியில் விரைவில் இருதயவியல் துறை: அமைச்சர் தகவல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டுக்கு சென்று அங்குள்ள ஏற்பாடுகள் மற்றும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.பின், அமைச்சர் கூறியதாவது:திருவள்ளூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு யாரும் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் உள்ள 11 மருத்துவக் கல்லுாரிகளில் ஆண்டுதோறும் தேவைக்கேற்ப உபகரணங்கள் வாங்கி தந்து, உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருதயவியல் துறை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், 4.50 கோடி ரூபாய் மதிப்பில் திருவள்ளூர் மருத்துவக் கல்லுாரியில் இருதயவியல் துறை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் ரேவதி, துணை முதல்வர் திலகவதி, இணை இயக்குநர் சேகர், துணை இயக்குனர்கள் ஜவஹர்லால், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.