உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து குப்பை தொட்டிக்குத்தான் போகும்: கிருஷ்ணசாமி

ராமநாதபுரம்: நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.,வினரால் பெறப்படும் கையெழுத்து குப்பை தொட்டிக்குத்தான் போகும். இது மக்களை ஏமாற்றுவதற்காக அக்கட்சி நடத்தும் நாடகம் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் நடந்த கட்சி முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான மோதல்கள் மீண்டும் தலை துாக்கியுள்ளன. திருநெல்வேலியில் இருவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் இந்தியா மட்டுமல்ல உலக அரங்கில் தமிழர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தந்துள்ளது.இதில் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நவ. 18ல் திருநெல்வேலியில் கண்டன ஊர்வலம் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெறும். கவர்னர் ரவி மீது வழக்கு தொடர முடியாது. அரசியல் சாசன சட்டத்தை முழுமையாக படிக்க வேண்டும். கவர்னரை பதவி நீக்கம் செய்ய முடியாது, இடமாற்றம் செய்யலாம். நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க., வினர் நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் பெறப்படும் கையெழுத்து குப்பை தொட்டிக்குத்தான் போகும். நீட் தேர்வு விஷயத்தில் தி.மு.க., தோல்வி அடைந்துவிட்டது. அதனை மறைக்க இந்த நாடகம் நடத்தப்படுகிறது.மீனவர்கள் சமீப காலமாக இலங்கை கடற்படையாலும், புதிதாக கடற்கொள்ளையர்களாலும் தாக்கப்பட்டு வருகின்றனர். வாழ்வாதாரத்திற்காக கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்