அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்: மாவட்ட கலைத்திருவிழாவில் அசத்தல்
கோவை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கலை திருவிழாவில், 3,900 மாணவர்கள் பங்கேற்றனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் நடத்தப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த இரு நாட்கள் போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை மாவட்டத்தின், 86 பள்ளிகளை சேர்ந்த, 3,900 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.சி.எஸ்.ஐ., பெண்கள் பள்ளி, புனித மைக்கேல் பள்ளி உட்பட ஐந்து மையங்களில் நடனம், நாடகம், இசை, மொழித்திறன், நுண் கலை ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.புனித மைக்கேல் பள்ளியில், வில்லுப்பாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், பாரம்பரிய கலைகளை கண்முன் கொண்டுவந்தனர். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில், முதல் மூன்று பரிசுகள் வென்றவர்களின் விபரம், அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.