பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் தாமதம்! ஒதுக்கிய நிதியை இழக்கும் அபாயம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு மானியம் முழுமையாக கிடைக்காததால் அதை செலவிடாமலேயே அரசு திரும்ப பெற்றுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் 993 அரசு பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.75 ஆயிரம், ரூ.1 லட்சம் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மூலம் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகிறது. இது இரு தவணைகளாக கல்வியாண்டின் துவக்கம், அரையாண்டு விடுமுறைக்கு பின்னும் வழங்குகிறது. 2023-24ம் கல்வியாண்டிற்கான தொகையின் பாதி ஜூனில் வழங்கப்பட்டது. 2024 ஜனவரியில் வழங்கப்பட வேண்டிய இரண்டாம் தவணை தற்போது வரை வழங்கப்படவில்லை. இந்த மானியம் மூலம் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு, கற்றல் உபகரணங்கள் வாங்குதல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பராமரிப்புகளுக்கு அத்தொகை செலவிடப்படும். ரூ.25 ஆயிரம் என்றால் ரூ.12,500 மட்டுமே வரப்பெற்றுள்ளது. ஜனவரி மாத தொகை தற்போது மார்ச் 15 வரை ஆகியும் பெறப்படவில்லை. இந்நிலையில் செலவு செய்யாத தொகைகள் மார்ச் 31ல் திரும்ப பெறப்படும் அபாயம் உள்ளது.இது குறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: சில ஆண்டுகளாகவே இந்த மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படுகின்றன. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. விருதுநகரில் 2வது தவணை இன்னும் கிடைக்கவில்லை. இதற்கான உத்தரவே இதுவரை மாவட்டத்திற்கு வரப்பெறவில்லை. கல்வி அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி மானியத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.துவக்கப்பள்ளிகளில் இந்த பராமரிப்பு நிதி போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சிங்கிள் நோடல் ஏஜென்ஸி மூலம் கணக்கு பராமரிக்கப்பட்டாலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறு சிறு பராமரிப்பு மட்டுமே செய்ய முடிகிறது என்கின்றனர். எனவே அரசு இரு தவணைகளையும் முழுமையாக வழங்கவும், துவக்கப்பள்ளிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.