மருத்துவ கல்லுாரி முன்னாள் முதல்வர் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அதே மருத்துவ கல்லுாரியில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பாக அதன் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ்.முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் சஞ்சய் வசிஷ்ட் உட்பட 15 பேருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது.இங்கு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், இரவு பணியில் இருந்தபோது மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவரை கைது செய்யப்பட்டார். இது குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.அந்த மருத்துவ கல்லுாரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷிடமும் விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே, சந்தீப் கோஷ் கல்லுாரி முதல்வராக இருந்தபோது, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படிசி.பி.ஐ.,க்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி, நிதி முறைகேடு புகார்கள் குறித்து ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், முன்னாள் துணை முதல்வரும், மருத்துவ கண்காணிப்பாளராகவும் இருந்த சஞ்சய் வசிஷ்ட், தடயவியல் பிரிவுத்துறை பேராசிரியர், மருந்து வினியோகஸ்தர் உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.முன்னதாக, சந்தீப் கோஷ் வீட்டில் சோதனை மேற்கொள்ள, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை 6:00 மணிக்கு சென்றனர். அப்போது அவரது வீடு திறக்கப்படாததால் ஒன்றரை மணி நேரம் வெளியே காத்திருந்தனர். அதன்பின், அவரது வீட்டின் கதவு திறக்கப்பட்டதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுதவிர மருத்துவ கல்லுாரியில் சந்தீப் கோஷ் பயன்படுத்திய அறை, உணவகம், கட்டடம் அமைந்துள்ள பகுதிகளிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.உண்மை கண்டறியும் சோதனைபயிற்சி டாக்டர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய், கோல்கட்டாவில் உள்ள பிரசிடன்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, சிறை வளாகத்திலேயே அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று நடத்தினர். இதுதவிர, கோல்கட்டாவில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் மேலும் இருவரிடமும் இச்சோதனை நடத்தப்பட்டது.