அரசியலமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை கெடுக்க முயற்சி: கவர்னர் ரவி
சென்னை: அரசியலமைப்பு மற்றும் அதன் நிறுவன அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்க சமூக விரோதிகள் முயற்சிக்கின்றனர், என கவர்னர் ரவி கூறியுள்ளார்.சென்னையில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: நமது அரசியலமைப்பு நாட்டின் உச்சபட்ச சட்டம். பாரதத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட லட்சக்கணக்கான தியாகிகளின் கனவுகளால் உருவானது நமது அரசியலமைப்பு. அது, சுதந்திர இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அழகாக விளக்குகிறது. அரசியலமைப்பு என்பது பாரதத்தின் ஒவ்வோர் குடிமகனின் உணர்விலும் உத்வேகத்திலும் இருக்க வேண்டும்.துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு, அதைப் பற்றி மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை.தேச விரோத சக்திகளுடன் சில சுயநலவாதிகள் கூட்டு சேர்ந்துள்ளனர். அவர்களிடம் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இன்று போலியான மற்றும் பொய்யான கதைகளைப் பரப்புவதன் மூலம் அராஜகத்தை உருவாக்க விரும்புகின்றனர். அரசியலமைப்பு மற்றும் அதன் நிறுவன அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.