உள்ளூர் செய்திகள்

கவர்னரின் தனிநபர், நிறுவனத்துக்கான விருது; கோவையில் இருவருக்கு மகுடம்

கோவை: தமிழக கவர்னரின் சமூக சேவைக்கான விருதுக்கு, கோவை ஸ்வர்கா பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா மற்றும் இதயங்கள் அறக்கட்டளை தேர்வு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, ஸ்வர்ணலதா கூறியதாவது:2009ம் ஆண்டு எனக்கு பக்கவாதத்தால், பேச்சு, பார்வை போனது; நடக்க முடியாமலும் போனது. சிகிச்சையால்,60 சதவீதம் குணமானது. 2012ல் கோவை வந்து,பக்கவாத விழிப்புணர்வுக்காக,2014ல், கணவர் டாக்டர் குருபிரசாத் உடன் சேர்ந்து, ஸ்வர்கா பவுண்டேஷனை துவங்கினேன்.பக்கவாத நோயாளிகளுக்காக சாரதி எனும், வாகனத் திட்டத்தை துவக்கினோம். ரயில்வே ஸ்டேஷன்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான நகரும் படிக்கட்டுகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்கள், அனைத்து போலீஸ் அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், அரசு பள்ளிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் கட்டித்தந்துள்ளோம்.எங்கள் சவுக்கியா கிளினிக்கில், தினமும், 1,500 பேருக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. இவ்விருது, இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உத்வேகமாக இருக்கும். அரசு அவர்களை இவ்விருது வாயிலாக அங்கீகரித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். நிறுவன பிரிவில் விருது பெற்றுள்ள, இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது:டைப், 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சிகிச்சை அளித்து வருகிறோம். துவக்கத்தில் ஒரு சிலருடன் துவங்கி, இன்று, 3,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறோம்.இந்தியாவில், ஒன்பது லட்சம் குழந்தைகள் டைப்,1 சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் இது, 5 சதவீதம் அதிகரிக்கிறது. தமிழக அரசு இக்குழந்தைகளுக்கு பெரியளவில் உதவி வருகிறது.கவர்னர் விருது, இதயங்கள் அறக்கட்டளைக்கு மிகப்பெரிய அங்கீகாரம். எங்கள் பணியை மேலும் உத்வேகமாக மேற்கொள்ள உதவும். இது, இதயங்கள் அறக்கட்டளை குழுவுக்கு கிடைத்த அங்கீகாரம்.இதுபோன்ற விருதுகளால் இன்னும், பல ஆயிரம் குழந்தைகள் பயனடைவர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்