சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
விருதுநகர்:'தமிழகத்தில், 20 மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அதை விரைந்து நிரப்ப வேண்டும்' என, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலர் அன்பழகன் வலியுறுத்திஉள்ளார்.அவர் கூறியதாவது:மேல்நிலை கல்வியில், 100 சதவீத தேர்ச்சி; அதுவே நம் இலக்கு என்று பல்வேறு விதமான வழிகாட்டுதல்கள், ஆணைகளை வழங்குகின்றனர். சுதந்திரமான, முழுமையான புரிதலுடன் கூடிய கற்றல் கற்பித்தல் பணிகளை, ஆசிரியர்கள் செய்ய விடாமல், சுருக்கமான முறையில் கோச்சிங் முறையில், டியூஷன் சென்டர்களாக மாற்றுகின்றனர்.சிறு தேர்வு, வாரத்தேர்வு, மாதத்தேர்வு என தேர்வுகளாக பள்ளி வேலை நேரம் செல்கிறது. முதன்மை கல்வி அலு வலர்களும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இயந்திரகதியாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.ஆசிரியர்களை ஒருமையில் திட்டுவதும், சுயமரியாதை போகும் வகையில் நடந்து கொள்வதும் என, மன உளைச்சல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில், 20 மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும். அரசின் நலத்திட்டங்களாலும், நிர்வாக மேலாண்மைகளாலும், ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் பாதிக்கப்பட்டு வருகிறது.உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆசிரியர்களுக்கு இடையே பல்வேறு கேள்வி, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்களை பாதுகாக்கும் பணியில் தமிழக அரசும் பள்ளி கல்வித்துறையும் அடுத்த கட்ட செயல்பாடுகளை உடனே துவங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.