வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்கள் காலி : புலம்பும் அலுவலர்கள்
சென்னை:தமிழகத்தில் வேளாண் துறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட உதவி இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடுதல் பணிச்சுமையால் வேளாண் அலுவலர்கள் தவிக்கின்றனர்.தமிழகத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வேளாண் உதவி இயக்குநர்கள் நியமிக்கப்படுகின்றனர். தங்கள் வட்டாரத்தில் வேளாண் பயிர் சாகுபடி நிலை, மத்திய, மாநில அரசு திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்லுதல், பயிர்களில் பூச்சி நோய் தாக்குதலை கண்காணித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குதல், உரம், பூச்சி மருந்துகள், விதைகள் விற்பனையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் பல்வேறு மாவட்டங்களில் ஒன்று முதல் ஐந்து உதவி இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பணியிடங்களையும் வேளாண் அலுவலர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர். இந்நிலை பல மாதங்களாக நீடிப்பதால் வேளாண் துறை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளன.வேளாண் அலுவலர்கள் கூறுகையில், 'ஆய்வுக்கூட்டங்களுக்கு அறிக்கை தயாரித்தல், களப்பணி, அலுவலகப்பணி என அனைத்தையும் கவனிக்கிறோம். தினமும் புதிது புதிதாக பணி வழங்கப்படுகிறது. இதனால் அன்றாட பணியுடன் உதவி இயக்குநர் பணியை கூடுதலாக கவனிப்பது சுமையாக உள்ளது. மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன் உதவி இயக்குநர் பணியிடத்தை நிரப்ப பட்டியல் தயாரானது. ஆனால் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. உதவி இயக்குநர்களை நியமித்து பணிச்சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.