உள்ளூர் செய்திகள்

எழுத்தறிவுடன் சமத்துவத்தையும் போதிக்கும் மயிலம் ஸ்ரீ சிவப்பிரகாசர் மேல்நிலைப் பள்ளி

சிவஞான பாலய சுவாமிகள் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் மயிலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக மயிலம் பொம்மபுர ஆதீனம் 18ம் பட்டம் சுவாமிகளின் வழிகாட்டுதலின் பேரில் 1956ம் ஆண்டு மலை அடிவாரத்தின் கீழ் ஸ்ரீ சிவப்பிரகாசர் பெயரில் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி உருவாக்கப்பட்டது.தொடர்ந்து 2007ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் மயிலம், கொல்லியங்குணம், தழுதாளி தென் ஆலப்பாக்கம் கொரளூர், செண்டூர், பாதிராப்புலியூர் உட்பட சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 377 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.மயிலம் திருமடத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் பள்ளியின் செயலாளராக உள்ளார். தலைமை ஆசிரியராக வீரப்பன் பணிபுரிந்து வருகிறார். மற்றும் 11 ஆசிரியர்கள், 4 அலுவலக பணியாளர்கள் மேல்நிலை சுயநிதி பிரிவில் 10 ஆசிரியர்கள் உட்பட 25 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.இப்பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடந்த 2024ம் ஆண்டு மற்றும் 2025ம் ஆண்டுளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.பள்ளியில், கணினி ஆய்வகம், வகுப்பறை, அறிவியல் ஆய்வகம் என மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக பாடம் கற்பிக்கப்படுகிறது. மாணவர்களின் அறிவு வேட்கையை தணிக்க பள்ளியில் நுாலகம், அறிவியல் ஆய்வுக்கூடம், உயர்தர கணினி ஆய்வகம் போன்ற வசதிகள் உள்ளது.மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கம், மனிதநேயம், நாட்டுப்பற்று, பொது சேவை தொண்டு விழிப்புணர்வு, பொது அறிவு போன்றவைகளும் கற்பிக்கப்படுகிறது. மேலும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சி, யோகா பயிற்சி, தற்காப்பு கலைகள் என பல்வேறு கலைகளில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.பள்ளியின் பெயர் வர காரணம் தமிழகத்தில் 17ம் நுாற்றாண்டின் பிற்பகுதியிலும் 18ம் நுாற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் கவிஞர் மற்றும் தத்துவவாதி சிவப்பிரகாசர். இவர் 'கற்பனைக் களஞ்சியம்', 'சிவனுபுதிச் செல்வர்' என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியத்திற்காக முப்பத்தி நான்கு நுால்களை எழுதியுள்ளார்.சிவப்பிரகாச சுவாமிகள் தமிழகம் முழுதும் பயணம் செய்தார். சாந்தலிங்க சுவாமிகள் வழியில் அவரைச் சந்தித்தார். அவர்கள் மயிலம் முருகன் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டனர். அங்கு சிவஞான பாலய சுவாமிகளை சந்தித்தனர். சிவப்பிரகாச சுவாமிகள் சிவஞான பாலய சுவாமிகளின் முதல் மற்றும் பிரதான சீடரானார்.வீரமாமுனிவர் வாதுசெய்ய சிவப்பிரகாச சுவாமிகளை அழைத்த போது அவர் கொள்கைகளை மறுத்து 'ஏசுமத நிராகரணம்'எனும் நுாலை எழுதினார். சிவஞான பாலய சுவாமிகள் மீது சிற்றிலக்கிய வகைகளில் பாடல் பாடினார்.சிறப்பு வாய்ந்த கற்பனை கவிஞர் சிவப்பிரகாசரின் பெயரை மயிலம் 18ம் பட்ட சுவாமிகள் இப்பள்ளிக்கு சூட்டியது மிகவும் பெருமை வாய்ந்ததாகும்.சமூகப்பணி, கல்வி வளர்ச்சியில் பங்கு இந்த பள்ளி மயிலம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு எழுத்தறிவிக்கும் இடமாகவும், தமிழையும், சமத்துவத்தையும் போதிக்கின்ற ஒரு இடமாக திகழ்கிறது.இந்த பள்ளியில் படித்து தற்போது, பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். பலர் உள்ளாட்சி பிரதிநிதிகளாகவும், சமூக ஆர்வலர்களாகவும், முற்போக்கு விவசாயிகளாகவும்உள்ளனர்.ஏழை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த கல்வி நிறுவனம் பல்வேறு சமூக கல்விப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலம் செந்தமிழ் கழகம் சார்பில் 1938ல் தமிழ் முதன்மை பாடமாக கொண்ட கல்லுாரி சுவாமிகளால் துவங்கப்பட்டது.அந்த கல்லுாரி தற்போது தரம் உயர்த்தப்பட்டு கலை அறிவியல் கல்லுாரியாக செயல்பட்டு வருகிறது இவ்வகையில் மயிலம் பொம்மபுர ஆதீனம் சமூகப் பணி கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது.கல்வித்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலில் தேர்வில் 'சென்டம்'மயிலம் பகுதியில் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்நிறுவனம் பெரும் பங்காற்றி வருகிறது. இங்கு மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இலக்கிய மன்றம், கிராம கல்விக் குழு கூட்டம், ஆண்டு விழா, அறிவியல் விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் உதயசூரியன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இப்பள்ளி கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. பள்ளியில் படித்த மாணவர்கள் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். - விஸ்வநாதன், செயலாளர், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்