பள்ளி வளாகத்தில் கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கூவத்துார்: பரமேஸ்வரமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூவத்துார் அருகே பரமேஸ்வரமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் நெற்குணப்பட்டு ஊராட்சி, தண்டரை ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.பள்ளி வளாகத்தை சுற்றி சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால், பள்ளி மாணவர்கள் விளையாட போதுமான இடவசதியின்றி சிரமப்படுகின்றனர்.அடர்த்தியான மரங்களால், பள்ளிக்குள் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களும் வருகின்றன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.எனவே, பள்ளி திறப்பதற்குள் கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.