நீட் தேர்வில் தொடரும் குளறுபடி ஹால் டிக்கெட் பெறுவதில் சிக்கல்
சென்னை: தொழில்நுட்ப கோளாறால், 'நீட்' தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது.நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு, கடந்த மே 3ம் தேதி நடந்தது. நாடு முழுதும், 22.86 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர்.பின், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் மறுதேர்வு, வரும் 21ம் தேதி நடக்க உள்ளது.அதற்கான ஹால் டிக்கெட், நேற்று முன்தினம் தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., இணையதளத்தில் வெளியானது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் போது, தேர்வு கட்டணம் திரும்ப பெற, வங்கி கணக்கு விபரங்களை மீண்டும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.அதை உறுதி செய்ய முயற்சித்தால், இணையதளம் முடங்கி விடுகிறது. சிறிது நேரத்தில், உங்கள் வங்கி கணக்கு விபரங்களை தர விரும்பவில்லை என தகவல் தரப்படுவதாகவும் மாணவ மாணவியர் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால், மாணவர்கள் நீட் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற முடியாத சூழலை என்.டி.ஏ., உருவாக்கி இருப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.இந்த குளறுபடி குறித்து, என்.டி.ஏ., அளித்துள்ள விளக்கம்:மாணவ மாணவியர் சிலர், நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யும் போது, தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது சர்வர் சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.எங்கள் குழுக்கள், அந்த சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்க பணியாற்றி வருகின்றன. நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம்.மேலும், மிக விரைவில், அனைத்து தேர்வர்களுக்கும் ஹால் டிக்கெட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வோம். இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மீண்டும் சிரமப்படுத்தாதீர்! 'ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு சரிபார்ப்பு நடைமுறையை உடனடியாக நீக்க வேண்டும். ஏற்கனவே தேர்வு ரத்தானதால், மன உளைச்சலில் உள்ள மாணவர்களை மீண்டும் சிரமத்துக்கு உள்ளாக்காதீர். - வெங்கடேசன் மார்க்சிஸ்ட் எம்.பி.,