உள்ளூர் செய்திகள்

இந்திய தொழில்நுட்பத்தில் கப்பல் வழி முனையம்: இஸ்ரோவின் புதிய சாதனை

சென்னை: இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள கப்பல் வழி முனையத்தை சோதித்து, மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது, 'இஸ்ரோ' நிறுவனம்.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, விண்வெளி அறிவியல் துறையில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பல்வேறு புரட்சிகளை செய்து வருகிறது. இதன்படி, தற்போது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பல் வழி முனையத்தை, சென்னை கடல் பகுதியில், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கப்பலான சாகர் மஞ்ஜுஷாவில் இருந்து சோதித்து சாதனை படைத்துள்ளது.எஸ்.பி.டி., அல்லது 'ஷிப் போர்ன் டெர்மினல்' எனும் கப்பல் வழி முனையம் என்பது, தரைவழி தொலைதொடர்பு நிலையத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் செல்லும் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், செயற்கைக்கோள்கள், விண்கலன்களை தொடர்பு கொள்ளும் வகையிலான, கப்பல் வழி கண்காணிப்பு அமைப்பு.எதற்காக சோதனை?இது வரை உள்ள கப்பல் வழி முனையங்களில், வெளிநாட்டு தொழில்நுட்பங்கள், வெளிநாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, இஸ்ரோவின் துணை அமைப்பான, 'இஸ்ட்ரராக்ட்' மற்றும் சென்னையில் உள்ள என்.ஐ.ஓ.டி., எனும், தேசிய பெருங்கடல்கள் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கடல்வழி முனையத்தை உருவாக்கி, கடந்த 26ம் தேதி முதல் சோதித்ததில், அனைத்து சோதனைகளும் வெற்றி அடைந்துள்ளன.இது, உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்த முப்படைகளின் தகவல் பரிமாற்றம், ஏவுகணைகள், விண்வெளிக்கான ஆள் அனுப்பும் ககன்யான் விண்கலங்களுக்கு, மிகவும் நம்பகமான தொலைத்தெடார்பு மையமாக செயல்படும்.வசதிகள்இந்த கப்பலில் உள்ள முனையம், பெருங்காற்று, மழை, பேரலைகளை கடந்து, ராக்கெட்டின் பயணத்தை, கடலில் இருந்து கண்காணித்து, துல்லியமான தகவல்களை, தரைவழி தொலைதொடர்பு மையத்துக்கு அனுப்பும். இதனால், கடல் எல்லையின் மேல் பயணிக்கும் ககன்யான் விண்கலத்தின் பாதையை துல்லியமாக அறிய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்