உள்ளூர் செய்திகள்

டென்மார்க் ஆசிரியர்கள், மாணவர்கள் குழுவினர் விருதுநகர் பள்ளிக்கு வருகை

விருதுநகர்: நமதுநாட்டின் பாரம்பரியம், கல்வி, கலைகள் குறித்து அறிந்து கொள்ள வந்துள்ள டென்மார்க் ஆசிரியர்கள், மாணவர்கள், விருதுநகர் கே.வி.எஸ்., மெட்ரிக்.,மேல்நிலை பள்ளிக்கு வந்தனர். டென்மார்க் கோபன்ஹெகன் நகரில்உள்ள டோர்ன்வெட்ஸ்குலோன் பள்ளியின் 3 ஆசிரியர்கள், 12 மாணவர்கள் நமதுநாட்டின் பாரம்பரியம், கலாசாரம், கலைகள், பழக்கவழக்கம் கல்வி முறை உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்வதற்காக 16 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். முதலில் சென்னை சொர்ணம்மாள் பள்ளிக்கு வந்த அவர்கள் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடி தீபாவளி கொண்டாடினர். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில், திருமலைநாயக்கர் மகாலை பார்வையிட்டனர். சொர்ணம்மாள் பள்ளி தாளாளர் ஆதிநாராயணன் தலைமையில் நேற்று அக்குழுவினர் விருதுநகர் கே.வி.எஸ்., மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளிக்கு வந்தனர். பள்ளிகளின் வளர்ச்சி, அலுவலக செயல்பாடு, ஆசிரியர்கள் பாடம் நடத்தும்விதம் குறித்து கேட்டறிந்தனர். மாணவர்களுடன் கலந்துரையாடினர். அக்குழுவினருக்கு யோகா, சிலம்பம், பரதம் ஆகியவற்றை மாணவர்கள் செய்து காட்டினர். தொடர்ந்து கே.வி.எஸ்., ஆங்கிலப்பள்ளிக்கு சென்றனர். பின்னர் மாரியம்மன் கோயில், காமராஜர் நினைவு இல்லத்திற்கும் சென்றனர். குழுத்தலைவரான ஆசிரியை சன்னி கூறுகையில், "இந்தியாவின் ஆன்மிகம், விருந்தோம்பல், கூட்டுக்குடும்ப உறவுகள், கலாசாரம், பண்பாடு, கல்விமுறை குறித்து தெரிந்துகொண்டோம். இதை எங்கள் நாட்டு மக்களிடம் கூறுவோம். இப்பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்